தனியார் பால் சேகரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து சேகரிக்கப்பட்ட பசும்பாலை ஆற்றில் கலந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் டிக்கோயா பகுதியில் குறித்த சம்பவம் இன்று(17) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டன் டிக்கோயா பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற பால் சேகரிப்பு நிலையம் ஒன்றிற்கு இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தினமும் பசும்பால் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை அதிகளவிலான பசும்பால் ஆற்றில் கலக்கப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவத்தை அறிவதற்காக விரைந்த ஹட்டன் பொலிஸார் பால் சேகரிப்பு நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பால் சேகரிப்பு நிலையத்தில் சேகரிக்கப்பட்ட பால் தாங்கி ஒன்றில் இருந்து கசிவு எற்பட்டுள்ளதன் காரணமாகவே அதிகளவில் பசும்பால் வெளியேறியுள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பால் சேகரிப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் மாத்திரமே கடமையில் இருந்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சந்தேகம் கொண்ட பொலிஸார் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

சுமார் 2000 லீற்றர் பால் இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரிய காரணங்கள் வழங்கப்படாமையினால் உரிமையாளரே பாலை ஆற்றில் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதோடு இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments

comments