புற்றுநோய் பாதித்த மகனின் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த இளம்தம்பதி : குவியும் பாராட்டுகள்!!

புற்றுநோய் பாதித்த மகனின் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த இளம்தம்பதி : குவியும் பாராட்டுகள்!!

கேரளா பலத்த மழையால் தத்தளித்து வரும் நிலையில் சிறுவனின் புற்றுநோய்க்காக வைத்திருந்த பணத்தை அவர் குடும்பத்தார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களுக்கு பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. 2.26 லட்சம் மக்கள் 1,239 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் எர்ணாக்குளத்தை சேர்ந்த அனஸ் என்பவரின் குடும்பம் ஒரு நெகிழ்ச்சியான விடயத்தை செய்துள்ளது. அனஸ் – ராஜீலா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான 4 வயது சிறுவன் பிறக்கும் போதே மன வளர்ச்சி குன்றிய நிலையில் பிறந்தான்.

இதோடு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறுவனை புற்றுநோய் தாக்கியது. இதற்கான சிகிச்சைக்கு சேமித்து வைத்த பணத்தை அனஸ் – ராஜீலா தம்பதி முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுக்கவுள்ளனர்.

இவர்களின் நெகிழ்ச்சியான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அனஸ், அடுத்த வெள்ளிக்கிழமை எங்கள் மகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

எங்களுக்கு நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது, ஆனாலும் கேரளா மழையில் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு முன்னால் இது சாதாரணம் என நினைக்கிறேன். இதற்காக நிதியுதவி செய்யவுள்ளோம், நிச்சயம் இந்த துயரத்தில் இருந்து கேரளா மீண்டு வரும் என நம்புவதாக கூறியுள்ளார்.

இதனிடையில் இந்த விடயத்தை கேள்விப்பட்ட கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா, அனஸுடன் தொலைபேசியில் பேசியதோடு அவர் மகனின் சிகிச்சைக்கு உதவ உள்ளதாக கூறியுள்ளார்.

You might also like