யாழில் கணவன் மனைவி படுகொலை : தொடர் விசாரணைக்கு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு

யாழ். கோண்டாவில் பகுதியில் கணவன், மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரியின் பிணையை இரத்து செய்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த சுரேஸ்குமார் மற்றும் அவரது மனைவி சுபதீபா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த இரண்டு படுகொலைகளையும் சந்தேகநபரே மேற்கொண்டாதக தெரிவித்து சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

இதன் போது குற்றப்பத்திரம் எதிரிக்கு வாசித்து காட்டப்பட்ட போது குறித்த படுகொலைகளுக்கும் தமக்கு தொடர்பில்லை என அவர் மன்றுரைத்தார்.

அத்துடன், யூரல் சபை இல்லாத விசாரணையை தெரிவு செய்வதாகவும், எதிரி மன்றில் தெரிவித்தார்.

இதனடிப்படையில், குறித்த வழக்கை மே மாதம் 2,3,4ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், எதிரியின் பிணை இரத்து செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

You might also like