முல்லைத்தீவில் 500 ரூபாய் செலவழித்து 1,500 ரூபாய் கொடுப்பனவு

முல்லைத்தீவு, துணுக்காய் ஆரோக்கியபுரம், அமதிபுரம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம் கிராமங்களின் மக்கள், வாழ்வின் எழுச்சிக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்கு, துணுக்காய் நகரத்துக்குச்  சென்று வருவதில் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளாக, துணுக்காய்க்கும் அக்கராயனுக்கும் இடையில் பஸ் சேவைகள் நடைபெறாததன் காரணமாக, அமதிபுரம் கிராமத்தில் உள்ள வாழ்வின் எழுச்சிப் பயனாளி ஒருவர் திருமுறிகண்டி, மாங்குளம் ஊடாக துணுக்காய் செல்வதற்கு  500 ரூபாயை போக்குவரத்துக்காக செலவு செய்தே 1,500 ரூபாய் கொடுப்பனவைப் பெறக் கூடியதாக உள்ளது.

வறுமையில் உள்ள மக்களே வாழ்வின் எழுச்சிக் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்ட நிலையில், போக்குவரத்து நெருக்கடியினால் பெருமளவு பணத்தினை செலவு செய்வதா? என கேள்வி எழுப்புகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் அதிகாரிகள், மேற்படி கிராமங்களைச் சேர்ந்த 1,000 வரையான குடும்பங்களின்  கொடுப்பனவுகளை கிராமங்களுக்கு வந்து வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like