வவுனியாவில் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஓழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வவுனியாவில் ஜனவரி தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவு, வவுனியா நகரசபை மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (30.03.2017) 600 பேரடங்கிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (30-03.2017) காலை ஒன்று கூடிய சிவில் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக வீதியோரங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிவில் பாதுகாப்பு பிரிவுடன் நகரசபை ஊழியர்கள் மற்றும் சுகாதார திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

மடுக்கந்த, மாமடுவ.உலுக்குளம் மற்றும் வவுனியா நகர் பிரதேசங்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு பிரிவினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வவுனியா பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ். லவன்

வவுனியாவில் ஜனவரி 2017 தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இலங்கை முழுவதும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்கு நகரமயமாக்கலும் மக்களின் வாழ்வியல் மாற்றமும் காரணமாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

அத்துடன் நான்கு முறையில் திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். முதலாவது கிராமப்புறங்களில் ,பாடசாலைகளில் நகரத்தில் மற்றும் அரச விடுதிகள் மற்றும் ஸ்தாபணங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

You might also like