பன்னங்கண்டி மக்களுக்காக நான் நீதிமன்றில் வாதாடுவேன் எம்.ஏ சுமந்திரன்

கிளிநொச்சி – பன்னங்கண்டி, சரஸ்வதி குடியிருப்பு மக்களது காணிப்பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

நல்லிணக்க அடிப்படையில் குறித்த காணி மக்களிடம் கையளிக்கப்படவில்லை ஆயின், நீதிமன்றத்தின் ஊடாக சட்டடநடவடிக்கை மூலம் காணியைப் பெற்றுத்தருவதற்கு உதவிபுரிவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தம்மிடம் கூறியதாக சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் தாம் 20 வருடங்களுக்கும் மேலாக வசித்துவரும் குறித்த காணியை தமக்கு நிரந்தரமாக வழங்குவதுடன், அதற்கான காணி உரிமைப்பத்திரத்தைப் பெற்றுத்தருமாறும் வலியுறுத்தி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எதுவித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

எனினும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துள்ள தாம், சந்ததிகள் கடந்த பின்னரும் தங்குவதற்கு நிரந்தர வீடின்றி அநாதரவாக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

You might also like