யாழில் வாள்களுடன் நடமாடிய கும்பல்! பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

மோட்டார் சைக்கிளில் கையில் வாள்களுடன் நடமாடிய கும்பல் ஒன்றினால் நேற்றைய தினம் தட்டாதெரு மற்றும் கலட்டி பகுதிகளில் பதற்ற நிலை காணப்பட்டிருந்தது.

எனினும் போக்குவரத்து பொலிஸாரின் பிரசன்னம் காணப்பட்டதால் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறவில்லை.

நேற்றைய தினம் இரவு ஏழு மணியளவில் கே.கே.எஸ் வீதி, தட்டாதெரு சந்தியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஆறு பேர் கொண்ட குழு நடமாடியுள்ளது.

குறித்த குழு தட்டா தெரு சந்திக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கை ஒன்றில் வாள்களுடன் சிறிது நேரம் நின்றுவிட்டு பின்னர் கலட்டி பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளது.

இவர்கள் இவ்வாறு அப்பகுதியால் வாள்களுடன் நடமாடுவதை கண்டவர்கள் அப்பகுதியின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுவதனையும் சிறிது நேரம் தவிர்த்திருந்தனர்.

சட்ட விரோத குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதான கைதுகள் தொடருகின்ற நிலையிலும் சமூக விரோத கும்பல்கள் எந்தவித பயமும் இன்றி வாள்களுடன் நடமாடி வருவது குறித்து பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கூட தட்டாதெரு சந்திக்கு அருகாமையில் உள்ள மரக்காலை ஒன்றில் வைத்து இளைஞர்கள் இருவர் வாளால் வெட்டப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like