கடும் வரட்சி காரணமாக நெல்விவசாயிகளுக்கு அதிர்ஷ்டம்

வடமத்திய மாகாணத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக நெல்விவசாயிகளுக்கு என்றுமில்லாத அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

வரட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், நெல் விளைச்சலும் கடுமையாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக வடமத்திய மாகாணத்தில் இயங்கிவரும் முன்னணி அரிசி உற்பத்தி ஆலைகள் நெல் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.

இதற்குத் தீர்வு காணும் பொருட்டு குறித்த அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் இம்முறை அரசாங்கத்தின் உத்தரவாத விலையிலும் பார்க்க ஒன்று தொடக்கம் இரண்டு வரையான ரூபா கூடுதல் விலைக்கு நெல் கொள்வனவு செய்ய தலைப்பட்டுள்ளனர்.

முன்னைய காலங்களில் இதே வர்த்தகர்கள் மூன்று தொடக்கம் நான்கு ரூபா வரையில் உத்தரவாத விலையை விடக் குறைவான விலைக்கு நெல் கொள்வனவு செய்வதன் காரணமாக விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை சிரமப்பட்டு அரசாங்க கொள்வனவு நிலையங்களுக்கு எடுத்து வரவேண்டிய நெருக்கடி இருந்தது.

எனினும் இம்முறை வர்த்தகர்கள் வயலுக்கே வந்து நெல்லைக் கொள்வனவு செய்வதன் காரணமாக விவசாயிகளுக்கு கூடுதல் விலையும், மறுபுறத்தில் போக்குவரத்துச் செலவு மிச்சப்படுவதன் காரணமாக அதிலும் ஒரு தொகை லாபமும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடையும் அதே நேரம், அரிசி தட்டுப்பாடு ஏற்படும் தருணத்தில் சந்தையில் விடுவதற்குப் போதுமான அரிசியை கையிருப்பில் வைத்திருக்க முடியாத நெருக்கடி அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் இன்றுவரை அரசாங்க கொள்வனவு நிலையங்களுக்கு எந்தவொரு விவசாயியும் நெல் விற்பனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like