வவுனியா புதிய பேருந்து நிலையம் நாய்களின் கூடாரமாக மாறும் அவலம்

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் தற்போது மக்கள் பயன்படுத்தப்படாமையால் நாய்கள் படுத்துறங்கும் கூடாரமாக மாறி வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட குறித்த பேருந்து நிலையத்தை அமைக்கும் போது பலரும் அதில் அமைக்க வேண்டாம். இது பொருத்தமற்ற பிரதேசம் என கூறப்பட்ட போதும் மஹிந்த ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இருப்பினும் இலங்கை அரச போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து குறித்த பேருந்து நிலையம் திறந்து சில தினங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் மூடப்பட்டது.

மீண்டும் இம்மாதம் 30ஆம் திகதி முதல் இயங்கும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை.

இந்த நிலையில் குறித்த பேருந்து நிலையம் தற்போது நாய்கள் படுத்துறங்கும் கூடாரமாக மாறியிருப்பது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like