எயிட்ஸ் பாதிப்பு சந்தேகம் காரணமாக மாணவியொருக்கு பெரும் அநீதி

கம்பஹா பிரதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவருக்கு எயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதாக சந்தேகித்து பெரும் அநீதி இழைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள முக்கிய பாடசாலையொன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவரே இந்த அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் தாயார் அவரைப் பெற்றெடுத்த பின்னர் தனது சகோதரிக்கு தத்துக் கொடுத்திருந்தார். தற்போது அந்த மாணவியும் தனது வளர்ப்புப் பெற்றோரையே தனது பெற்றோராக கருதிக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் சிறுமியின் உண்மையான தாயாருக்கு எயிட்ஸ்நோய் தொற்றியிருப்பதான சந்தேகத்தின் பேரில் பரிசோதனையொன்றுக்குச் சென்ற பின்னர், அவர் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
இதன் காரணமாக அவர் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவரது மகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன.
இதன் காரணமாக குறித்த சிறுமியை பாடசாலையை விட்டு இடைநிறுத்துமாறு அதன் நிர்வாகம் கண்டிப்பான முறையில் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அவரை பாடசாலையில் அனுமதிக்கவும் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இத்தனைக்கும் குறித்த மாணவி பாடசாலையின் தவணைப் பரீட்சைகளில் வகுப்பில் முதலாமிடம் பெறும் திறமையான மாணவியாக இருந்த போதிலும், வீணான சந்தேகம் காரணமாக அவரது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது வளர்ப்புப் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.