தொடரும் மனித வியாபாரம் இலங்கையில் இருந்து விற்கப்படும் பெண்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் தொழில் நிமித்தம் செல்வது தடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று “அக்கரையில் நாம் அமைப்பு” ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொடர்ந்தும் மனித வியாபாரம் நடைபெற்று கொண்டு வருகின்றது.

டுபாய் நாட்டில் உள்ள அல் ஹென் என்ற நிறுவனத்தை விசாரணை செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தினால் இலங்கையில் இருந்து விசிட் விசா மூலம் பெண்கள் அழைத்து செல்லப்படுகின்றார்கள்.

அவ்வாறு பெண்களை அனுப்பி வைப்பவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா முதல் கொடுக்கப்படுகின்றது.

பின்னர் அங்கிருந்து சவூதி, ஓமான் உட்பட பல அரேபிய நாடுகளுக்கு அவர்கள் விற்கப்படுகின்றார்கள். அந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்ற பின்னர் திருட்டு விசா கொடுக்கப்படுகின்றது.

அப்போது அவர்களது விசிட் விசா நிறைவடைந்து அந்தப் பெண்கள் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டால் இலங்கைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமாக இருக்கின்றார்கள். ஆனால் இந்த மனித வியாபாரம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்ன முடிவுகளை எடுத்துள்ளது?

அப்பாவிப் பெண்கள் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்றார்கள். இந்த நிலை ஏற்படக் காரணம் இலங்கை அரசின் பொறுப்பற்ற தன்மையே.

அதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் அனுப்பப்படுவதை தடுக்க வேண்டும். முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும் சவூதி, ஜோர்தான், குவைட் போன்ற நாடுகளுக்கு இலங்கைப் பெண்கள் செல்வதனை மட்டுமாவது தடுக்கப்பட வேண்டும்.

இது முழு நாட்டுக்கும் அரசு செய்யும் மிகப்பெரிய சேவையாகும் எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

You might also like