கிளிநொச்சி வலயகல்விப்பணிப்பாளர் வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரப்படவுள்ளது

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக விண்ணப்பம் கோரப்பட்டு நிரப்புவதற்கு நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு ஓர் நிரந்தரக் கல்விப் படிப்பாளர் இன்றி பதில் பணிப்பாளரே கடமையாற்றுவது தொடர்பில் கேட்டபோதே  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் செயலாளர் மேலும்  தெரிவிக்கையில் ,

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக விண்ணப்பம் கோரப்பட்டு நிரப்புவதற்கு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதற்காக அடுத்த வாரம் விண்ணப்பம் கோரப்பட்டு விரைவிலேயே நேர்முகத் தேர்வும் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இரண்டாம் தவணைஆரம்பமாகும்வேளையில் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு நிரந்தர அதிபர் நியமிக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம் என்றார். இதேவேளை இதுவரை காலமும் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நிரப்பப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளரின் நியமனம் பொதுச் சேவைகள் ஆணைக் குழுவிடம் சென்றமை தொடர்பில் கேட்டபோது குறித்த பணிக்கு சேவையாற்ற அதிகாரிகள் முன் வராதமையும் ஓர் காரணம் என்றார்.இதேநேரம் வடக்கில் காணப்படும் 12 கல்வி வலயங்களில் தற்போது கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். அதேபோன்று இந்த ஆண்டில் மேலும் 3 வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளனர்.

அதாவது தென்மராட்சி , வடமராட்சி , வவுனியா வடக்கு ஆகியவற்றின் வலயக்கல்விப் படிப்பாளர்களும் ஓய்வு பெற்றுச் செல்ல உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like