அழைப்பில் வரும் ஆபத்து : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..!

“அதிஷ்டம்” என்ற இந்த வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை.

நம் வாழ்வில் ஏற்படும் வெற்றி-தோல்விகள், சுக-துக்கங்கள், நோய்-ஆரோக்கியம், வளமை-வறுமை, ஏற்ற-தாழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அதிஷ்டம் என்ற ஒன்று தாக்கம் செலுத்துகின்றது.

இதனாலோ என்னவோ “அதிஷ்டம்” என்ற இந்த விடயத்திற்கு மக்கள் அடிமைப்பட்டு கிடக்கின்றார்கள். ஆனால் “அதிஷ்டம்” என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் சமகாலத்தில் அதிகரித்துள்ளன.

குறிப்பாக கையடக்க தொலைபேசி மற்றும் ஈ மெயில் போன்றவற்றின் ஊடாக குறுந்தகவல்களை பகிர்ந்தும், அழைப்பினை ஏற்படுத்தியும் “அதிஷ்டம்” என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பலர் ஏமாற்றப்படுகின்றார்கள்.

இந்த ஏமாற்று நடவடிக்கையினால் பெருந்தொகையான பணத்தை இழந்தவர்கள் பலரும் இருக்கின்றார்கள். இலங்கையில் சமகாலத்தில் இது போன்ற ஏமாற்று நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

அதாவது, உங்களுடைய கையடக்க தொலைபேசி மற்றும் ஈ மெயில் மூலம் தொடர்பு கொண்டு “நீங்கள் அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்”.

“உங்களுக்கு பெருந்தொகையான பணம் அல்லது பெறுமதியான பரிசு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது”. “இதனை பெற்றுக்கொள்ள நீங்கள் ஒரு தொகை பணத்தை வைப்பு செய்ய வேண்டும்” என அறிவிக்கப்படுகின்றது.

எனினும், இதன் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ளாத பலரும் அவர்கள் கேட்ட பணத்தை வைப்பு செய்து, அதன் பின்னர் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்துகொள்கின்றார்கள்.

இந்த ஏமாற்று நடவடிக்கைகளின் பின்னணியில் யார்..? இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் தெரியவராத நிலையில், ஒரு குறிப்பிட்ட தரப்பினரை இலக்கு வைத்து இந்த ஏமாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக, பின்னதங்கிய கிராமங்கள், மலையகம், மற்றும் வடக்கு கிழக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து இந்த ஏமாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நூதன ஏமாற்று நடவடிக்கைகளில் நகர் புறங்களில் இருக்கும் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இருக்கத்தான செய்கின்றன. பதிவாகியும் உள்ளன.

எவ்வாறாயினும், “உங்களுக்கு பெருந்தொகையான பணம் அல்லது பெறுமதியான பரிசு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது” என தெரிவிக்கப்படும் கருத்துக்கும், ஏமாற்று நடவடிக்கைகளுடன் தமக்கும் எவ்வித தொடர்பும், பொறுப்பும் கிடையாது என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, இனிவரும் காலங்களில் இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் வெளிநாட்டிலுள்ள சில மர்ம சக்திகள் இயங்குவதாக தெரிய வருகிறது. இது தொடர்பில் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த குழுவொன்றெ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஒருவனுடைய வாழ்வில் கடுமையான உழைப்பு, விடா முயற்சி என்பனவே அவனுடைய வளர்சியையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகின்றது. அதில் அதிஷ்டம் என்பது ஒரு பகுதி மட்டுமே.

எனவே, இது போன்ற ஏமாற்றுகாரர்களின் சதி நடவடிக்கைளில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்வதுடன், எமது உடமைகளையும் பணத்தினையும் பாதுகாத்து கொள்ளவேண்டும்.

You might also like