வவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு : வெற்றிக்கு பாடசாலை சமூகமே முழுமையான காரணமாம்

வவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு : வெற்றிக்கு பாடசாலை சமூகமே முழுமையான காரணமாம்

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

சாதனையாளரான மாணவி ரோகிதா புஸ்பதேவன் அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (07.12.2019) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் கந்தப்பிள்ளை திலீபன் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா , வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் , தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , வர்த்தக சமூகத்தினர் , வைத்தியர்கள் , சமூக சேவையாளர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பாடசாலை சமூகத்தினர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , நகரசபை உறுப்பினர் , சட்டத்தரணி என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தின் மூலம் மாணவி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கையினை பரிசோதனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் கலந்து கொண்டவர்களின் விசேட உரைகள் இடம்பெற்றிருந்ததுடன் மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்த மாணவி குறித்த கண்டுபிடிப்பை மேலும் மெருகூட்டி அதனை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்குதவற்கு பண உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடமிருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDEL INJECTOR) கண்டுபிடித்து மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமையுடன் அவரின் வெற்றிக்கு பாடசாலை சமூகம் மாத்திரமே முழுமையான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like