சற்று முன் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மத்திய சுகாதார அமைச்சர்

வவுனியாவிற்கு வருகை தந்திருந்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின  இன்று (02-04-2017) மாலை 2.00 மணிக்கு வவுனியாவில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப்போராட்டததை மேற்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்து கொண்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 38 நாட்களாக மேற்கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்திய சுகாதார அமைச்சரிடம் தங்கள் பிள்ளைகளை விடுவிக்காவிட்டாலும் பரவாயில்லை தங்களுக்கு ஒரு முறை காட்டுமாறு கண்ணீருடன் கேட்டுக்கொண்டனர்.

நிலைமையை விளக்கமாக கேட்டறிந்துகொண்ட மத்திய சுகாதார அமைச்சர் வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வட மாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிக்குமாறும் அவர் தணது அமைச்சிற்கு அதை அனுப்பி வைப்பார் என தெரிவித்ததுடன் தனிப்பட்ட ரீதியில் விசேட கவனம் செலுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியா மாவட்டத்தில் காணாமல்செய்யப்பட்டவர்கள் 1200 பேர் விபரங்கள் பதிவு செய்து இருப்பதாகவும் பதிவு செய்யாமல் பலர் இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

மத்திய சுகாதார அமைச்சருடன் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜிணோட் குரே ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

You might also like