​வைத்தியர்களின் கவனக்குறைவால் 10 வயது சிறுவன் மரணம்

அங்குனுகொலபெலெஸ்ஸ, அலுத்வெவ ஆரம்ப பாடசாலை மாணவர் ஒருவர் நாய் கடித்தமையினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்லும் போது குறித்த மாணவரை நாய் ஒன்று கடித்துள்ளது.

இந்நிலையில், குடும்பத்தினர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் வைத்தியர்கள் ஒழுங்கான முறையில் சிகிச்சை வழங்காமையினால் மாணவர் உயிரிழந்துள்ளார் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அங்குனுகொலபெலெஸ்ஸ பகுதியை சேர்ந்த 10 வயதுடைய பீ.எச்.திலங்க மதுஷான்ய என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் குறித்த பகுதியில் உள்ள பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

வைத்தியரால் ஊசி போட்டு மகனை காப்பாற்றியிருக்கலாம் எனினும் அவர் மகனை கண்டுக்கொள்ளவே இல்லை என உயிரிழந்த சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

பின்னர் தங்காலையில் இருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும் தற்போது மிகவும் தாமதமாகியுள்ளதாகவும், முடிந்த அளவு மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் என அம்பியூலன்ஸில் வந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்து அதிகாலை 5 மணியளவில் மகன் உயிரிழந்து விட்டார்.

அங்குனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் மகனை அனுமதித்த முதல் நாளே வைத்தியர்கள் ஒழுங்கான முறையில் சிகிச்சை வழங்கியிருந்தால் மகனை காப்பாற்றியிருக்கலாம் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவுவதற்கு குறித்த வைத்தியசாலையின் வைத்தியரை அனுகிய போது ஊடகங்களுக்கு எவ்வித தகவல்களும் வழங்க முடியாதென வைத்தியர் தெரிவித்துள்ளார்.

You might also like