கிளிநொச்சியின் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சியின் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் ஏனைய வணக்க ஸ்தலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கதாகும்.

நான்கு வணக்க ஸ்தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏனைய வணக்க ஸ்தலங்களை அமைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இன்றும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கவலை தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு வணக்க ஸ்தலங்களும் சம அளவு உயரத்தை கொண்டதாக அமைய வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் ஏற்பாடாகும்.

இந்நிலையில் இந்து வணக்க ஸ்தலம் அமைப்பதற்கு எவ்வகையான தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படாமலும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலை கட்டுவதற்கான இழுபறி நிலை காணப்படுகின்றமையாலும் குறித்த வணக்க ஸ்தலம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கிறிஸ்தவ வணக்க ஸ்தலம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க மறை மாவட்டம் செய்திருந்தது.

குறித்த ஏற்பாடுகளில் ஏற்பட்ட தாமதம் தொடர்பிலும், பொதுவான நிலைப்பாடு எடுப்பது தொடர்பிலும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டானியல் செ.தியாகராஜா பல்கலைக்கழக பீடாதிபதி ஏ.அற்புதராஜாவுடன் கலந்துரையாடியுள்ளார்.

எனினும் குறித்த வணக்க ஸ்தலத்திற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், கிறிஸ்தவ வணக்க ஸ்தலத்தினை பொது வழிபாட்டிற்கமைவாக கட்டுவதற்கு தென்னிந்திய திருச்சபை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என பேராயர் தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் பேராயரிடம் இன்று எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவியபோது,

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கண்டி பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய திருச்சபையினால் வணக்க ஸ்தலம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வணக்க ஸ்தலத்தினை அமைத்து கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் வணங்க கூடிய வகையில் பொதுவான கட்டடத்தினை அமைப்பதற்கான திட்டம் கைவசம் உள்ளதாகவும், பல்கலைக்கழக சமூகம் சம்மதம் தெரிவிக்குமிடத்து பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் எமது தென்னிந்திய திருச்சபை ஆலயம் உள்ளமையால் பல்கலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகளிற்கான பெண்கள் விடுதி ஒன்றினையும் மேற்கொண்டு தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கான ஆலோசனைகளை ஏற்கனவே பல்கலைக்கழக சமூகத்திடம் தான் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இஸ்லாமிய வணக்க ஸ்தலத்தை அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பௌத்த மாணவர்களின் முயற்சியினாலும், சமயம் சார்ந்தவர்களின் செயற்பாடுகளினாலும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

You might also like