திருமண வீட்டில் நுழைந்து 40 பவுண் நகை கொள்ளை : யாழில் சம்பவம்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஐயனார் கோவில் ஒழுங்கைப் பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவர் வீட்டில் கடந்த 30-ம் திகதி இரவு இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் 40 பவுண் தங்க நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரிய வருவதாவது,

மேற்படி வீட்டில் கடந்த 30-ம் திகதி திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அன்று இரவு வீட்டில் இருந்தவர்கள் சம்பிரதாயங்களின்படி மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பெண் வீட்டார் மாத்திரமே வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய திருடர்கள், நூதனமாக இரவு வேளை வீட்டினுள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது 40 பவுண் தங்க நகைகளும், இரண்டு லட்சம் ரூபாய் பணமும் மணமக்களுக்கு வழங்கிய சில அன்பளிப்பு பொருட்கள் என்பவையும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மறுநாள் வீட்டார் அதிகாலை எழுந்து பணம் நகை வைக்கப்பட்டிருந்த பயணப்பை வெளியே இருப்பதை அவதானித்த போதே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பின்பு தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து மோப்ப நாய் உதவியுடன் தேடுதலை மேற்கொண்ட போது, வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணித்திருக்கும் போது மோப்ப நாயுடன் பொலிஸார் வருவதை அவதானித்த நபர் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை துரத்திச் சென்று கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like