சட்டவிரோதமாக தொலைபேசி அழைப்பு ஒட்டுக்கேட்கப்பட்டதாக ஆதாரங்களுடன் புகார் அளித்த பொதுமகன்

களனி பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தன்னுடையதும், தனது குடும்பத்தாரினதும் தொலைபேசி அழைப்புக்கள் சட்டவிரோதமான முறையில் ஒட்டுக்கேட்கப்பட்டதாக ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ஏனைய விடயங்களை முன்வைத்து தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு முன்னிலையில் குறித்த நபர் தனது முறைப்பாட்டை முன்வைக்க இரண்டு மணிநேரத்துக்கும் கூடுதலான நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரின் தொலைபேசி மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, அவர் சுயமாக கண்டறிந்த வழிமுறையொன்றைக் கையாண்டு ஒட்டுக்கேட்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அதே வழிமுறையைக் கையாண்டு ஒட்டுக்கேட்கும் நபர்கள் பற்றிய விபரங்களையும் அவர் சுயமாக திரட்டிக் கொண்டுள்ளார். அரசாங்கத்தின் ஒட்டுக்கேட்கும் கருவிகளைக் கொண்டு ஒருசிலர் தன்னுடையவும், தனது குடும்பத்தாரினதும் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்ட விபரம் அவருக்குத் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களுடன் களனி பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் என்பவற்றில் புகார் அளித்தும் பொலிசார் அசமந்தமாக செயற்பட்டுள்ளனர்.

அதனையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் புகார் அளிக்க முயன்றபோது குறித்த விடயம் தமது அலுவல் எல்லைக்கு உட்படவில்லை என்று அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

தற்போது சம்பவம் குறித்து டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு என்பவற்றில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

You might also like