காதலர் தினமான இன்று அதிஷ்டம் இவர்களை தான் தேடி வருமாம்! ஆனால்….

காதலர் தினம் 2019: காதலை ஜெயிக்க வைக்கும் காதல் கிரகங்கள் உங்க ஜாதகத்தில் எப்படி இருக்கு

காதலர் தினமான இன்று காதல் கிரகங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.

மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. காதலுக்கு கிரகங்களும் காரணமாக இருக்கின்றன. சுக்கிரன், செவ்வாய், சந்திரன், சனி ஆகிய நால்வருமே காதலிக்க கற்றுத்தருவதில் முக்கியமானவர்கள். இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் என்பது முக்கிய தேவையாக உள்ளது. அதையும் கருத்தில் கொண்டே திருமண பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.

காதல் துறை தலைவர் சுக்கிரன்

காதலுக்கு உதவி செய்ய ஐந்து கிரகங்கள் இருந்தாலும் காதல் டிபார்மெண்ட் தலைவர் சுக்கிரன்தான். ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர். யார் மீது காதல் அம்பை தொடுக்கலாம் என்று தயாராக இருப்பார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம், துலாம், மீனம் ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் பார்வையால் காதலை பற்றிக்கொள்ள வைப்பார். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்தும் சுக்கிரன் ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். இவர்கள் இணைந்திருந்தால் காதல் பற்றிக்கொள்ளும்

சந்திரனின் உதவி

சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவர். காதலர்களை கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர் இவரே. மனதை தொலைத்து விட்டேன் என்று சிலர் புலம்புவார்கள். இதற்குக் காரணம் சந்திரன். சந்திரன் உடன் சுப கிரகங்களின் சேர்க்கை, பார்வை இருந்தால் அந்த காதல் வெற்றியடையும். பாவ கிரகங்களின் சேர்க்கை இருந்தால் அந்த காதலர்கள் பிரிந்து விடுவார்களாம்.

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை

காதலுக்கு வேகமும் துணிச்சலும் ரொம்பவே முக்கியம். வீரத்தின் நாயகன் ரத்தக் காரகன் செவ்வாய் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரைக்கும் போகவும் தயங்கமாட்டார்களாம். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகமாக இருக்கும்.

சந்திரன் சனி சேர்க்கை

காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அதற்கு அடித்தளம் போடுபவர் சனிபகவான். சனியோடு சந்திரன் சேர்க்கை பெற்றாலோ, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது எளிது. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது.

காதல் கலப்பு திருமணம்

ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் , களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும். காதலிக்கும் யோகம் இருந்து ராகு, கேதுக்களின் சம்மந்தம் ராசியிலோ அம்சத்திலோ இருக்குமானால், வாழ்க்கைத்துணை அந்நிய மதத்தினராகவோ அல்லது அயல் நாட்டை சேர்ந்தவராகவோ இருப்பார். ராகு முஸ்லீம் மதத்தையும், கேது கிருத்துவ மதத்தையும் குறிப்பவர். இவர்கள் 5, 7ம் அதிபதிகளோடு இணைந்திருப்பது, சுக்கிரனோடு கூட்டணி போன்ற கிரக நிலைகள் வேற்று மதத்தினரை காதலிக்கத் தூண்டுவதோடு பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்ள வைக்கும்.

கிரகங்களின் கூட்டணி

ஜாதகத்தில் லக்கினம் அல்லது ராசிக்கு 1, 5, 7, 9 ம் அதிபதிகள் சம்மந்தம் பெறவேண்டும். இது இணைவாகவே, பார்வையாகவே, பரிவர்த்தனையாகவோ, சார பரிவர்த்தனையாகவோ இருக்கலாம். 1, 5 அல்லது 5, 7 அல்லது 7, 9 அல்லது 1, 7 அல்லது 1, 5, 7 சம்மந்தம் இருந்தால் காதல் சம்பந்தம் அமையும். ஏழாம் அதிபதியோடு சுக்கிரன், செவ்வாய், சனி இணைவு அல்லது பார்வை. சுக்கிரன், சனி, செவ்வாய் இணைவு. சுக்கிரன், ராகு சம்மந்தம். ஒன்பதாம் பாவம், அதன் அதிபதி, குரு பாதிக்கப்பட்டிருந்தால் காதல் கலப்பு மணமாக முடியும்.

காதல் இனிக்கும்

ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12ல் மறையாமல் இருப்பது அவசியம்.

ஒழுக்கமான காதல்

காதலுக்கான கிரக நிலைகளோடு 4 ம் அதிபதி சம்மந்தப்பட்டால், அக்காதல் கல்லூரியிலேயே ஆரம்பமாகியிருக்கும். எல்லா விதமான சுகங்களுக்கும் நான்காம் இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். டூயல் சிம் போடுவது போல இரண்டு மூன்று என்று மறைமுக தொடர்புகள் இருக்கும்.

You might also like