யாழ்.விமான நிலையம் தொடர்பில் வெளிவரும் பல இரகசியங்கள்

யாழ்.விமான நிலையம்

திடீர் வேகத்துடன் பணிகள் முடிக்கப்பட்டு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும், வெற்றிகரமானதாக செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது என கார்வண்ணன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட போதும், நவம்பர் 11ஆம் திகதியே யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

எயார் இந்தியாவின் இணை நிறுவனமான எலையன்ஸ் எயார் நிறுவனம் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் சேவைகளை நடத்துகிறது.

72 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஏரிஆர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், இப்போது இந்த சேவையில் பயணிகளின் எண்ணிக்கை திருப்திகரமானதாக இல்லை என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னதாக, பலாலி விமான நிலையத்துக்கு இந்தியாவிலிருந்து சேவையை நடத்துவதற்கு இன்டிகோ, பிட்ஸ் எயார் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.

கடந்த ஆண்டின் பின் அரையாண்டுப் பகுதியில் பலாலி விமான நிலையம் மற்றும் அதற்கான சேவைகளை நடத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ள நிறுவனங்கள் குறித்து அடிக்கடி பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

எலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், பிட்ஸ் எயார் நிறுவனம் சென்னைக்கு வாடகை விமான சேவையை நடத்துவதற்கு பரீட்சார்த்த பயணம் ஒன்றை நடத்தியிருந்தது.

அதற்குப் பின்னர், அந்த நிறுவனமோ, இன்டிகோ நிறுவனமோ அல்லது வேறு எந்த நிறுவனங்களோ, விமான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வம் காட்டவில்லை.

பலாலி விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவிலிருந்து சேவைகளை ஆரம்பிக்க ஆர்வம் வெளியிட்ட நிறுவனங்கள், இப்போது ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

பலாலி விமான நிலையத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டளவு பயணிகள் போக்குவரத்து இடம்பெறாமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தற்போது 72 ஆசனங்களைக் கொண்ட விமானம் ஒன்று, வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது .

இதில், சராசரியாக 50 இற்கு குறைவான பயணிகளே பயணம் செய்வதாக கூறப்படுகிறது.

சென்னை – பலாலி விமான சேவை தொடங்கப்பட்ட முதல் மாத நிறைவில், 857 பயணிகள், பலாலி விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொண்டிருந்தனர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருந்தன.

முதல் மாத காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு 472 பேர் பயணித்தனர் என்றும், சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 385 பேர் பயணம் மேற்கொண்டனர் என்றும் கூறப்பட்டது.

எனினும், அதற்குப் பின்னர் இந்த எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படவில்லை. பயணிகள் போக்குவரத்தில் எதிர்பார்க்கப்பட்டளவுக்கு வளர்ச்சி இல்லாதமைக்கு அரசாங்கத்தின் மீதும், சேவையை நடத்தும் நிறுவனம் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

எலையன்ஸ் எயார் நிறுவனம் சென்னை – பலாலி இடையிலான போக்குவரத்துக்கு அறவிடும் கட்டணம், கொழும்பு –- சென்னை இடையிலான பயணத்துக்கு ஏனைய நிறுவனங்கள் அறவிடும் கட்டணத்தை விட மிக அதிகமாக உள்ளது.

பலாலி -– சென்னை விமானக் கட்டணம் இந்தளவு அதிகரித்திருப்பதற்கு, விமான நிறுவனத்தின் கட்டணம் மாத்திரம் காரணமல்ல.

இலங்கை அரசாங்கத்தின் வரிகள் மற்றும் கட்டணங்களுக்காக மாத்திரம், சுமார் 11,500 ரூபா அறவிடப்படுகிறது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு அறவிடப்படும், வரிகள் மற்றும் கட்டணங்களை விடவும் அதிகமான தொகை, பலாலி விமான நிலையத்தின் ஊடாக பயணம் செய்யும் பயணிகளிடம் அறவிடப்படுகிறது .

இந்தளவு வரிகள் மற்றும் கட்டணங்களை அறவிடும் அரசாங்கம், பலாலி விமான நிலையத்தில் பயணிகளுக்கான முழு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத பலாலி விமான நிலையத்திலிருந்து பயணம் செய்பவர்களிடம், பயணச்சீட்டுக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வரிகளாகவும், கட்டணங்களாகவும் அரசாங்கத்தினால் அறவிடப்படுகிறது.

பலாலி விமான நிலையம் கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் அவசரமாக திறக்கப்பட்டது. எந்த அடிப்படை வசதிகளும் செய்யாமல் திறக்கப்பட்டதாக அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தற்போதைய ஆளும்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

அரசியல் நலன் கருதியாவது, அப்போதைய அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை திறந்திருந்தது. அந்த வாய்ப்பு நழுவ விடப்பட்டிருக்குமானால், பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாமலேயே போயிருக்கலாம்.

ஏனென்றால், தற்போதைய அரசாங்கத்துக்கு பலாலி சர்வதேச விமான நிலையத்தின் மீது அக்கறையில்லை. அதனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பலாலி விமான நிலையம் அதனை சார்ந்த அபிவிருத்திகள் குறித்த செய்திகள் எல்லாமே அருகிப் போய் விட்டன.

மத்தள விமான நிலையத்தை மீண்டும் செயற்பட வைப்பதில் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்கேனும் பலாலியின் மீது தற்போதைய அரசாங்கம் காண்பிக்கவில்லை..

இதற்கு அரசியல் காரணிகள் மாத்திரமன்றி, இன ரீதியான காரணிகளும், பொருளாதாரக் காரணிகளும் கூட இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

பலாலி விமான நிலையம் ஒழுங்காக செயற்படத் தொடங்கினால், வடக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவோர் தொகை குறையும்.

அது, தென்பகுதியின் பொருளாதார வாய்ப்புகள், வளர்ச்சி என்பனவற்றை பாதிக்கும். எனவே, சிங்கள மேலாதிக்கச் சிந்தனை கொண்ட ஒரு அரசாங்கம், பலாலி போன்ற பிராந்திய விமான நிலையங்களின் வளர்ச்சியை அனுமதிக்க வாய்ப்பில்லை.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த சில வாரங்களுக்குப் பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரபரப்பாக ஊடகங்களுக்கு ஒரு தகவலை வெளியிட்டார். பலாலி விமான சேவையை ஆரம்பித்த முன்னைய அரசாங்கம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறவிடப்படும், கட்டணங்கள், வரிகளுக்கு இணையாகவே பலாலியிலும் அறவிடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு அநியாயம் செய்திருக்கிறது. கூட்டமைப்பும் இதற்கு துணைபோயிருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பலாலி விமான நிலைய கட்டணங்கள், வரிகள் குறித்து மீளாய்வு செய்வது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 3 மாதங்களாகி விட்ட போதும், எந்த மீளாய்வும் நடக்கவில்லை. வரிகளைக் குறைக்கவோ, விமானக் கட்டணத்தைக் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் அதிகளவு கட்டணங்களை செலுத்தியே பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தனி நபர்கள், நீண்ட பயணத்தை தவிர்க்க விரும்புபவர்கள், அவசர பயணங்களை மேற்கொள்பவர்கள் மாத்திரமே, இவ்வாறு அதிக கட்டணங்களை செலுத்த முன்வருவார்கள். வடக்கிலிருந்து குடும்பங்களாக, குழுக்களாக இந்தியா செல்பவர்களே அதிகம்.

அவர்களுக்கு ஏற்றதாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக் கூடியதாக, பலாலி விமான நிலையம் ஊடான சேவைகள் அமையவில்லை.

இந்தியாவுக்கு சென்று திரும்புகிறவர்கள் அங்கிருந்து பொருட்களை கொண்டு வரவே விரும்புவார்கள். தற்போது சேவையை நடத்தும் எலையன்ஸ் எயார் நிறுவனம், 15 கிலோ பொதிகளை மாத்திரமே அனுமதிக்கிறது.

கொழும்பு – சென்னை இடையே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில், பயணம் செய்பவர்கள், 30 கிலோ பொதிகளை கொண்டு வர முடியும்.

அதில் பாதியைத் தான் பலாலி வழியாக கொண்டு வர முடிகிறது. மேலதிக ஒவ்வொரு கிலோவுக்கும் 20 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

அதிகளவு பொதிகளைக் கொண்டு வர முடியாமல் இருப்பது, வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க முடியாமல் இருப்பதற்கு முக்கியமான காரணியாக உள்ளது.

கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்னை வழியாக பலாலிக்கு பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளன.

அவ்வாறு வருபவர்கள் அதிகளவு பொதிகளை கொண்டு வர விரும்புவார்கள். அதற்கு ஏற்றதாக எலையன்ஸ் எயர் நிறுவனத்தின் கட்டணங்கள் அமைந்திருக்கவில்லை.

இதனால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை அதிகளவில் ஈர்க்க முடியாத நிலையில் பலாலி விமான நிலையம் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் இருக்கிறது என்ற பெயர் தான் உள்ளதே தவிர, அதனை அபிவிருத்தி செய்து இன்னமும் வருமானமும் போக்குவரத்தும் அதிகம் கொண்டதாக மாற்றுவதற்கு எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலை நீடிக்கும் வரை பலாலி விமான நிலையம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது.

You might also like