மரத்தால் வீழ்ந்த சமூகத்தை மாடேறி மிதித்த கதையாய் கிளிநொச்சியில் ஆதன வரி – மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில் ஆதன வரி – மு.தமிழ்ச்செல்வன்

‘காய்நெல் அ றுத்துக் கவளங் கொளினே மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடியாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே’ இது புறநாறூற்றின் 184வது பாடல் வரி அறிவிடுதல் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது. அதாவது

ஒருமாவளவு விளைநிலமாக இருந்தாலும்(மா− ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தைக் குறிக்கும்) அதில் விளைந்த நெல்லைக் கவளம் கவளமாக அறுத்து யானைக்கு உணவாகக் கொடுத்தால் அது நீண்ட காலத்திற்கு பயன்படும். நூறு வயல்களாக இருந்தாலும் யா னையை அதனுள் புகவிட்டால் அது உண்பதைக் காட்டிலும் கா லில் மி திபட்டு சே தமாகும் கதிர்கள் அதிகமாகி குறுகிய காலத்திலேயே அ ழிந்து விடும். இந்த நெறிமுறையினை அறிவுடை வேந்தன் நன்கு அறிந்து வரியை மக்களிடம் அளவாக அறவிட்டால் நாட்டுமக்களுடன் மன்னனிற்கும் நாட்டிற்கும் நல்ல பலன் கிடைக்கும்.அதைவிடுத்து சிறுமைத்தனம் படைத்தவர்களுடன் சேர்ந்து இன்பக் கேளிக்கைகளை விரும்பி மக்கள் மீது அன்பு காட்டாது அநி யாய வரியை அவர்களிடம் இருந்து வற் புறுத்தி அ றவிட்டால் யானை பு குந்த நிலம் போல நாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் பயன்படாது கெ ட்டழிந்து நா டும் அ ழிந்துவிடும் என்று கூறுகின்றது இந்தப் பாடல்.

எனவே வரி என்பது மன்னர்களின் வசதிகாக அன்றி மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும் வரி மக்களுக்கு ஒரு சுமையாக இருக்க்கூடாது என்பதுவே காலம் காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற அறமாக காணப்படுகிறது. அண்மையில் கிளிநொச்சியில் நடைப்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது ஒரு மதத் தலைவர் சொன்னார் வரி அறவீடு என்பது தேனீ பூவிலிருந்து தேன் எடுப்பது போன்று இருக்க வேண்டும் மகரந்த சேர்க்கையும் நடைபெற வேண்டும் அதேவேளை தேனும் கிடைக்க வேண்டும் என்றார். இவையெல்லாம் வரி என்பது நியாயமானதாக மக்களுக்கு சுமையான இருக்க கூடாது என்பதனை வலியுறுத்துவதே.

ஆனால் அன்மைக்காலமாக கிளிநொச்சியில் புதிதாக அறவிடப்படுகின்ற ஆதன வரி தொடர்பில் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. அண்மையில் கூட ஒரு வர்த்தகர் கரைச்சி பிரதேச சபையினால் அறவிடப்படுகின்ற ஆதன வரிக்கு எதிராக சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். அத்தோடு கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம், உள்ளிட்ட பல பொது மக்கள் அமைப்புகளும் இந்த ஆதன வரிக்கு எதிராக தங்களின் ஆட்சேபனையை எழுத்து மூலம் தெரிவித்திருந்தனர்.

ஆதன வரி என்றால் என்ன?

ஒருவருடைய அசையா சொத்துகளின் வருடாந்த வாடகை பெறுமானத்திற்கு அந்தந்த உள்ளுராட்சி சபையினால் தீர்மானிக்கின்ற வீதத்தினை வரியாக அறவிடுதலாகும். ஆதாவது 1987ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் படி

•ஆதனவரி செலுத்துவதற்கான தகைமை
தமது ஆதனங்கள் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் முன்னேற்றமடைந்த பிரதேசத்தில் அமைந்திருக்கின்றபோது பின்வருமாறு உரித்தான காணியொன்றில் அல்லது கட்டிடமொன்றில் குடியிருப்பாளராக இருந்தால்.

•பிரதேச சபை எல்லைக்குள் அசையா சொத்துக்களின் உரிமையாளராக இருந்தால்.

•பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள வீடொன்றில் கட்டிடமொன்றில் அல்லது காணியொன்றில் வாடகைக்கு இருந்தால்.

•பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அரசாங்கத்துக்கு உரிய வீடொன்றில் கட்டிடமொன்றில் அல்லது காணியொன்றின் உரிமையாளராக இருந்தால்.

•பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அசையா சொத்துக்களின் பங்கு உரிமையாளராக (சம பங்கு உரிமையாளராக) இருந்தால்.

இங்கே ஒருவடைய அசையா சொத்துகளின் வருடாந்த பெறுமானத்தை மதிப்பீடு செய்வது விலை மதிப்பீட்டுத் திணைக்களமே. விலை மதிப்பீட்டுத்திணைக்களம் பெறுமானத்தை மதிப்பிட்டு அதனை பிரதேச சபையிடம் கையளிக்கும் பிரதேச சபையே அப் பெறுமானத்திற்கு பத்து வீதம் அறவிடுவதா? இருபது வீதம் அறவிடுவதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் நூறு வீத அதிகாரம் உண்டு. அதாவது ஒருவரின் சொத்தின் வருடாந்த பெறுமானத்திற்கு எத்தனை வீதம் ஆதன வரியாக அறவிட வேண்டும் என்ற தீர்மானத்தை அந்தந்த உள்ளுராட்சி சபைகளே மேற்கொள்ளும்

கரைச்சி பிரதேச சபையும் ஆதனவரியும்

கிளிநொச்சி மாவட்டம் யு த்தத் தற்கு பின் பீனிக்ஸ் பறவை போன்று எழுந்து வரும் மாவட்டமாகும். கடந்த பத்தாண்டுகளில் கிளிநொச்சி உட்கட்டுமானம் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல விடயங்களில் படிப்படியாக மீண்டு வரும் மாவட்டமாகும். இந்த நிலையில் கடந்த வருடம் முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளில் ஒன்றான கரைச்சி பிரதேச சபையே ஆதன வரியை அறவிட்டு வருகிறது. இதற்காக சொத்துகளின் மதிப்பீடுகளும் புதிதாக தற்போதைய விலை மதிப்பீட்டில் மதிப்பீடு செய்யப்பட்டது. இதனால் எல்லோருடைய சொத்துகளின் மதிப்பீடும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் அந்த சொத்துகளின் வருடாந்த பெறுமானத்திற்கு ஆதன வரியாக 10 வீதத்தினை அறவிட தீர்மானித்து அறவிட ஆரம்பித்த போதே மக்களிடம் எதி ர்ப்புக்கள் எழத் தொடங்கியது.

அதிகரித்த பெறுமானத்திற்கு அதிகரித்த வீதம் என்பது மக்கள் மீது ஒரு சுமையாக காணப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையில் கூட இதுவரை காலமும் பொது மக்களின் சொத்துகளின் மீது 6 வீதமாக அறவிடப்பட்டு வந்த ஆதனவரி இவ்வருடம்(2020) முதல் 8 வீதமாக அறவிட தீர்மானித்துள்ளனர். அத்தோடு வியாபார ஸ்தாபனங்கள் மீது இதுவரை காலமும் 8 வீதமாக அறவிடப்பட்டு வந்த ஆதனவரி இவ்வருடம் முதல் 10 வீதமாக அறவிட தீர்மானித்துள்ளதாக மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் கரைச்சி பிரதேச சபையில் ஆதனவரி அறிமுகத்திலேயே 10 வீதம் என்பதுவே பிரச்சினையாக காணப்படுகிறது. நாட்டிலுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் குறைந்தளவு வீத்த்திலேயே ஆதனவரி அறவிடப்படுகிறது. அல்லது அதிகரித்த வீதத்தினை கொண்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள சொத்துக்களின் வருடாந்த பெறுமானம பல வருடங்களுக்கு முன் மதிப்பிடப்பட்ட குறைந்த தொகையாகும். எனவே குறைந்த வருடாந்த பெறுமானத்திற்கு அதிகரித்த வீதம் என்பது சுமையாக இருக்காது. ஆனால் கிளிநொச்சியில் சொத்தின் வருடாந்த பெறுமதியும் அதிகம் ஆதன வரி வீதமும் அதிகம் இதனையே குறைக்குமாறு மக்கள் கோருகின்றனர்.

குறைக்க முடியுமா?

ஆதனவரி வீதத்தை குறைப்பதும் அதிகரிப்பதும் சபையிடம் உள்ள அதிகாரமே. ஒரு சபையானது ஆதன வரியை குறைப்பதாக இருந்தால் தனது சபைக் கூட்டத்தில் தீர்மானத்தை மேற்கொண்டு அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி அவரின் ஒப்புதலை பெற்றப்பின் அதனை வர்த்தமாணியில் பிரசுரிக்க வேண்டும் அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட குறைந்த வரி வீதத்தினை அறவிடமுடியும். அதிகரித்த ஆதன வரி வீதத்தற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் யோசித்தாலும் குறைந்த வரி வீதத்திற்கு அவர் தடையாக இருக்கப் போவதில்லை.
ஆனால் கரைச்சி பிரதேச சபையில் அரசியல் காரணங்களுக்காக அதிகரித்த ஆதனவரியை குறைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதாக தெரியவில்லை. தற்போதைய நிலைமையில் சபையில் ஆதன வரியை குறைப்பதா? இல்லையா? என்ற விடயம் தொடர்பில் வாக்கெடுப்புக்கு விட்டு குறித்த வாக்கெடுப்பில் ஆதன வரியை குறைப்பதற்கு ஆளும் தரப்பு ஆதரவாக வாக்களித்தால் எதிர் தரப்பு அதனை தங்களுக்கு சாதமாக தங்களின் அழு த்தம் எ திர்ப்பு காரணமாக இவ்வாறு நடந்த்தாக பிரச்சாரம் செய்வார்கள். மாறாக ஆதன வரிவீத குறைப்புக்கு எதிராக ஆளும் தரப்பு வாக்களித்தால் அதனையும் மக்கள் மத்தியில் தங்களுக்கு சாதகமாக எதிர்தரப்பு பயன்படுத்தும் எனவே இந்த அரசியல் காரணங்களுக்காக ஆதனவரி தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு கோரப்பட்டும் அது நி ராகரிக் கப்பட்டுள்ளது.

எனவே இங்கே மக்களின் நலன்களுக்கு அப்பால் அவரவர் கட்சி அரசியலே மேலோங்கி நிற்பதனை தெளிவாக உணர முடிகிறது. அதிகரித்த ஆதன வரி பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காணமுடியும் ஆனால் அதனை விடுத்து இப்பிரச்சினையை இடியப்பச் சிக்கலுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகளே இடம்பெற்று வருகிறது. மரத்தால் வீழ்ந்த ஒரு சமூகத்தை மாடேறி மிதித்த கதையாய் கிளிநொச்சியில் இந்த ஆதன வரி அமைந்துள்ளது என்பதே நிதர்சனம்.

You might also like