வவுனியா மக்களை சந்திக்க வவுனியா பிரதேச செயலாளருக்கு நேரமில்லையாம்.. மக்களை புறக்கணிக்கின்றாரா..!!

மக்களை சந்திக்க நேரமில்லை எனக் கூறும் வவுனியா பிரதேச செயலாளர்: மக்கள் தீர்வைப் பெற காத்திருப்பு

வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரை சந்திக்க செல்லும் மக்களை தற்போது சந்திக்க நேரமில்லை எனக் கூறி பிரதேச செயலாளர் அனுப்பி வைப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பித்தும், நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்கவில்லை எனத் தெரிவித்து பாதிக்கப்பட்டோர் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களை சந்திக்க இன்று சென்றிருந்தனர்.

இதன்போது நான் வேலையாக உள்ளேன். இன்று சந்திக்க முடியாது. உங்கள் பிரச்சனையை கடிதமாக எழுதி கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோர் கடிதத்தை எழுதி கொடுக்க சென்ற போது பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் நேர்முகத் தேர்வில் இருந்தமையால் அவர்களிடம் கடிதத்தை கொடுக்க முடியவில்லை. அதேபோல் பிரதேச செயலாளர் தனக்கு நேரமில்லை எனக் கூறியதால் அவரிடம் கொடுக்காது கடிதத்துடன் பாதிக்கப்பட்டோர் திரும்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நேர்முகத் தேர்வுகள் 3 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ள நிலையில் தமக்கு தீர்வினை பெற முடியாமையால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு எதிர்காலமே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்டோர் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

You might also like