வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு மக்கள் எதிர்ப்பு

வவுனியா, வைரவபுளியங்குளம், 10 ஆம் ஒழுங்கையில் மக்கள் குடிமனை செறிவாகவுள்ள பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதி மற்றும் 10 ஆம் ஒழுங்கைப் பகுதி அதிக குடியிருப்புக்கள் உள்ள பகுதியாகவும், மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாகவுள்ள பகுதியாகவும் சனச் செறிவு மிக்க பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைத்து வருகிறது. இதனால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் எதிர்காலத்தில் தாம் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மக்கள் செறிவற்ற பகுதிகளில் பல காணிகள் இருந்தும் மக்களது நாளாந்த வாழ்க்கை மற்றும் இயல்பு நிலையைக் குழப்பும் வகையில் இத்தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இச் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், அல்லாது விடின் வாழ்வுரிமைக்காக தாம் வீதியில் இறஙகிப் போராட வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபைச் செயலாளர் இ.தயாபரன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்காக எம்மிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்கள். ஆனால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. நகரசபையின் அனுமதி பெறாது மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைகள் மக்களது முறைப்பாட்டையடுத்து கடந்த சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். மக்களது கோரிக்கைகே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like