அடிமைகள் போன்று உணருவதாக பன்னங்கண்டி சரஸ்வதி குடியிருப்பு மக்கள் ஆதங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியில் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்த தாங்கள், தற்போது அடிமைகளாக வாழ்வது போன்று உணருவதாக பன்னங்கண்டி – சரஸ்வதி குடியிருப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நிரந்தர காணி உரிமையை வழங்குமாறு வலியுறுத்தி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் எவ்வித தீர்வுகளும் இன்றிய நிலையில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் மூன்று பிரிவினராக வசித்துவரும் மக்கள், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மலையகம் உட்பட பல்வேறு பகுதிகளிலுமிருந்து இடம்பெயர்ந்து அப்பகுதியில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் காணிகளற்ற நிலையில் தற்காலிகமாக தங்கியிருந்த மக்கள், தற்போது குடியிருக்கும் காணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் குடியேற்றப்பட்டனர்.

எனினும் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்ததைத் தொடர்ந்து சரஸ்வதிகுடியிருப்பு, ஜொனிகுடியிருப்பு மற்றும் பன்னங்கண்டி மக்கள் தற்போது குடியிருக்கும் காணிகளில் மீண்டும் குடியேறினர்.

எனினும் புலம்பெயர் நாட்டிலுள்ள குறித்த காணி உரிமையாளர், காணி உரிமைப்பத்திரத்தை அப்பகுதி மக்களுக்கு நிரந்தரமாக வழங்க மறுத்துள்ளதனால், குறித்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் உட்பட எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தாங்கள் குடியிருக்கும் காணியை தமக்கு நிரந்தரமாக வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், தாம் அடிமை வாழ்க்கை வாழ்வதைப் போன்று உணருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like