வவுனியாவில் அரச திணைக்கள பணிப்பாளர் பதவி ஒன்றிற்கு இருவரா : வவுனியாவில் இப்படியும் ஓர் நிலையா?

இலங்கையிலேயே முதல் முறையாக வவுனியாவில் ஒர் திணைக்களத்திற்கு இரு பணிப்பாளர்கள் : குழப்பத்தில் ஊழியர்கள்

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்தில் இரு பணிப்பாளர் கடமையாற்றுவதினால் ஊழியர்கள் மாத்திரமின்றி பொதுமக்களும் குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மற்றும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றின் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சகிலாபாணுவிற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (28.02.2020) காலை 8.30 மணிக்கு புதிய வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக அருந்ததி வேல்சிவானந்தன் கையெழுத்திட்டு கடமையினை பொறுப்பேற்றிருந்தார்.

எனினும் இடமாற்றம் வழங்கப்பட்ட வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபாணு அவர்கள் தான் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் இடமாற்றம் பெற்று செல்ல முடியாது என தெரிவித்து புதிய பணிப்பாளரிடம் கடமைகளை கையளிக்காது (பணிப்பாளரின் அறையில்) அவர் கடமைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளார்.

இதன் காரணமாக அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் யாரிடம் கையெழுத்து பெறுவது போன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் பொதுமக்களிடம் இரு பணிப்பாளர்களில் யாரிடம் செல்வது என குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையிலான வடமாகாண விவசாய திணைக்களத்தின் கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியவர்கள் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை (02.03.2020) வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு கடமையாற்றும் ஊழியர்களிடம் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டு புதிய வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராகிய அருந்ததி வேல்சிவானந்தன் அவர்களின் கீழ் கடமையாற்றுமாறு தெரிவத்துடன் வரவேடுகளை பதிவு மேற்கொள்வதற்கு கைரேகை இயந்திரம் ஒன்றினையும் பாவனைக்கு வழங்கினார்.

எனினும் குறித்த வரவேடுகளை பதிவு செய்வதற்காக பொருத்தப்பட்ட கைரேகை இயந்திரத்தில் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சகிலாபாணு வின் பதிவேடு நீக்கப்பட்டுள்ளது. இந் நிலையும் அவர் இன்றும் (03.03.2020) அங்கு பணிப்பாளரின் அறையில் கடமைகளை புரிந்து வருகின்றார்.

எவ்வித அனுமதியுமின்றி கடந்த சனிக்கிழமை விடுமுறை தினத்தில் (01.03.2020) அன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 மணி திறக்கப்பட்டு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபாணு மற்றும் கணக்காளர் ஆகியோர் அலுவலகத்தில் (வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம்) கடையாற்றியமை தொடர்பில் விசாரணைகள் முன்னேடுக்கப்படுவதாக வட மாகாண விவசாய திணைக்கள அதிகாரியோருவர் தெரிவித்தார்.

You might also like