அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் அக்கராயன் நீர்ப்பாசனத் திணைக்கள விடுதியில் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன் தலைமையில் இன்று (03) நடைபெற்றது.

தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தித்தின் கீழ் உள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது குளங்களின் கீழ் சிறுதானிய செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அக்கராயன்குளத்தில் தற்போதுள்ள நீரின் அளவைக்கொண்டு 1186.5 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதலாவது நீர் விநியோக திகதியாக மே மாதம் முதலாம் திகதியும், இறுதி விதைப்புத் திகதியாக மே மாதம் 20ஆம் திகதியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே குளத்தின் நீரின் அளவைக்கொண்டு இவ்வாண்டு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய செய்கை மேற்கொள்ளும் குளமாக இது காணப்படுவதனால் நீரைச்சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள ஒத்துழைக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நீர்ப்பாசனப் பொறியியலாளர்களான என்.சுதாகரன், செந்தூரன் மற்றும் மாவட்ட விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் விதைகள திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like