கிளிநொச்சியில் வரட்சி காலநிலை காரணமாக நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு குளங்களைத் தவிர ஏனைய குளங்களின் கீழ் மிகக் குறைவான நீர் மட்டம் காணப்படுவதன் காரணமாக நன்னீர் மீன்வளப் பெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், குடமுருட்டிக்குளம், புதுமுறிப்புக்குளம் என்பன வழமையான நீர்மட்டத்தினைக் கொண்டுள்ளன. ஆனால் இரணைமடு, கல்மடு, கரியாலைநாகபடுவான், பிரமந்தனாறு, கனகாம்பிகைக்குளம் உட்பட கமநல சேவை நிலையங்களுக்குக் கீழ் வருகின்ற ஏனைய சிறு குளங்களின் கீழ் நீர் மட்டம் குறைந்து காணப்படுவதன் காரணமாக நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்படையத் தொடங்கியுள்ளனர்.

இரணைமடுக்குளத்தில் இக்காலங்களில் குறைந்தது முப்பது அடி நீர் மட்டம் காணப்படும் நிலையில் குளத்தின் புனரமைப்புப் பணிகள் மற்றும் குறைவான மழைவீழ்ச்சி காரணமாக தற்போது 10 அடியளவான நீரே காணப்படுகின்றது.

இந்நிலையில், நன்னீர் மீன்பிடியினை நம்பியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

“கிளிநொச்சி மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடி பாதிக்கப்படுமானால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என, பொது மக்கள் ​கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like