விடுதலைப் புலிகள் இருவரை எரித்த சம்பவம்: யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல்

‘தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை எரித்து படுகொலை செய்தனர்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணு லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த புலி உறுப்பினர்கள் இருவரும் 1997ஆம் ஆண்டு எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில், லெப்டினன்ட் கேர்ணல் குமார வீரசிங்ஹ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய 10 பேரையும் விடுதலை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

லெப்டினன்ட் கேர்ணல் யசகுமார வீரசிங்ஹ, பொத்துபிட்டியே பிரேம ஜனத், லசம்பலகே தொன் சுனில், புலுக்குட்ராலலாகே திலகரத்ன, ஜயகொடி ஆராய்ச்சிகே நிமல் ஜயகொடி மற்றும் சுசந்த உதயகுமார் ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராகவே அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், சுசந்த உதயகுமார என்ற சந்தேகநபர் காலமாகிவிட்டார். அதிகுற்றச்சாட்டுப் பத்திரம், அச்சுவேலிப் பொலிஸாரினால், அண்மையில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களான எஸ்.சௌந்தரராஜன் மற்றும் மனுனாபிள்ளை ஜயசீலன் ஆகிய இருவரையும் 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி, யாழ்ப்பாணம்,

அச்சுவேலி சிறுப்பிட்டிப் பிரதேசத்தில் வைத்து எரித்துப் படுகொலை செய்து காணாமல் ஆக்கிவிட்டனர் என்ற குற்றச்சாட்டிலேயே, இராணுவ வீரர்கள் 16 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதில், 15 பேரை அச்சுவேலி பொலிஸார் 2016ஆம் ஆண்டு கைது செய்துள்ளனர். மற்றையவர் கைது செய்வதற்கு முன்னரே இறந்துவிட்டார்.

இந்த வழக்கு, கடந்த 28ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட ஐவருக்கு எதிராக, மனிதப் படுகொலை குற்றச்சாட்டின் கீழ்,

அதிகுற்றச்சாட்டு பத்திரத்தைத் தாக்கல் செய்து அவ்வழக்கை, மிகவிரைவாக விசாரணைக்கு உட்படுத்துமாறும் சட்டமா அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.

அதனடிப்படையில், சந்தேகநபர்கள் ஐவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு, அச்சுவேலி பொலிஸாருக்கு, நீதிபதி கட்டளையிட்டார். இதனால் அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் யாழ்.மேல் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஐவரும், இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால், சட்டமா அதிபரின் அனுமதியின்றி பிணை வழங்கமுடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை, எதிர்வரும் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

You might also like