தயா மாஸ்டர் உள்ளிட்ட புலிகளின் முக்கிய தலைவர்களை யார் விசாரிப்பது? யாழில் ராஜித சேனாரத்ன கேள்வி

இலங்கையில் போர்க்குற்றங்கள் எவையும் நடக்கவில்லை. ஆகவே போர்க்குற்ற விசாரணை தேவையற்ற ஒன்று என மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகைதந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர், மாவட்டத்திலுள்ள வைத்திய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் முடிவில் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

போர்க்குற்ற விசாரணை தேவையற்ற ஒன்று, அவ்வாறு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமானால் புலிகளையும் விசாரிக்க வேண்டும். அது எப்படி விசாரிப்பது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. அனைவருக்குமான அதிகாரப்பகிர்வு, சம உரிமை குறித்தே கவனம் செலுத்துகின்றோம் எனவும் கூறினார்.

போர்க்குற்ற விசாரணை என்று வந்தால் விடுதலைப் புலிகள் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பில் யார் விசாரணைகளை மேற்கொள்வது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டரை சுட்டிக்காட்டிய ராஜித சேனாரத்தின, இவர் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களை யார் விசாரிப்பது எனவும் சிரித்தவாறே கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டில் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவும் அதிகாரங்களை பகிரவுமே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாட்டில் சிங்கள மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் இருக்க வேண்டும் எனற தீர்வொன்றை உருவாக்குவோம் என்றார்.

மேலும் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் சுகாதார அமைச்ச ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.

 

You might also like