நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் (வைத்தியர்கள்) எதிர்வரும் 7ம் திகதி நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இது இலங்கை மருத்துவ சேவையிற்கு தரமற்ற மருத்துவர்களை அரசியல் செல்வாக்குக்காகவும் பணத்துக்காகவும் உருவாக்கி நோயாளர்களின் உயிரை பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் ஆகையினால் எம்முடன் இம் முறை நூற்றுக்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் கைகோர்த்துள்ளன.

இதே தினம் கொழும்பில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் இப் போராட்டத்தினை வலியுறுத்தி 11மணி தொடக்கம் 3மணி வரையில் நடைபெறும்.

மேலும், அவசர நோய் அல்லது விபத்துகளின் போது உடனடியாக தயங்காமல் வைத்தியசாலையை நாடுங்கள் அங்கு எமது வைத்தியர்கள் உங்கள் உயிர்காக்க எப்போதும் போலவே தயார் நிலையில் இருப்பார்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like