வவுனியாவில் வீதியினை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்து ஸ்தம்பிதம்

வவுனியா தாலிக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றுதிரண்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 7 மணிக்கு வாரிக்குட்டியூர் சந்தியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடி வீதியை திருத்தம் செய்து தா, மாணவர்களின் போக்குவரத்துக்கு பாதுகாப்பான வீதி வேண்டும், எங்கள் ஊரில் கிரவல் எடுத்து ஏ 9 வீதியை திருத்துவதா போன்ற கோசங்களை எழுப்பியதுடன் வாசகங்கள் தாய்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் இடபட்ட மாணவர்கள் ஊர்வலமாக தமது பாடசாலையான கணேஸ்வரா வித்தியாலயத்திற்கு சென்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து தாலிக்குளம் மற்றும் பாவக்குளம் மக்கள் தாலிக்குளத்தில் இருந்து மன்னார் வீதி வரை வீதியை திருத்தம் செய்து தா என்ற கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1958 ஆம் ஆண்டு குடியேறிய இப்பகுதி மக்கள் தமது வீதி தற்போதுவரை சீரின்றியே காணப்படுவதாகவும் இதன் காரணமாக தமது கிராமத்தின் முன்னேற்றம் காணாதுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் தமது கிராமத்திற்கு வரும் அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை செய்து தருவதில்லை எனவும் தெரிவித்தனர்.

You might also like