யாழ் பெண்ணின் கொலையை மறைக்க இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதா?

சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில் எம்மை அடையாளம் காட்டாது விட்டால் 5 இலட்சம் ரூபாய் பணம் வழங்க பேரம் பேசப்பட்டதாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் வைத்து 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில் எம்மை அடையாளம் காட்டாது விட்டால் 5 இலட்சம் ரூபாய் பணம் வழங்குவோம் என பேரம்பேசியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சியாக உள்ள வாய் பேச முடியாத சிறுவன் தம்மை அடையாளம் காட்டாது விட்டால் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருவோம் என சந்தேக நபர்கள் கூறியதாக சட்டத்தரணி ஊடாக நீதிவான் நீதிமன்றின் நீதவான் ஏ.எம்.எம்.றியாழின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுவனின் உறவு முறையை சேர்ந்த ஒருவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதனை அறிந்த சந்தேக நபர்கள் சிறுவனின் உறவுகாரருடன் பேசியுள்ளனர்.

இது குறித்து சிறுவனின் தாயிடம் கேட்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசிய சிறுவனின் உறவுகாரரிடம் பொலிஸார் வாக்கு மூலம் எடுத்துக்கொண்டுள்ளதுடன் அந்த வழக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏழு மாத கர்ப்பிணிப் பெண் ஹம்சிகா (வயது 27) கடந்த ஜனவரி 24 ஆம் திகதி யாழ். ஊர்காவற்துறை பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like