லக்சாயினியின் உடலில் கடி காயமும் காணப்பட்டது : நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியம்

படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில் பின்புறமாக கடி காயம் காணப்பட்டது. அதில் பல் அடையாளம் தெளிவாக காணப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

நெடுந்தீவு சிறுமி லக்சாயினி படுகொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார். தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

பல் அடையாளம் காணப்பட்ட அந்த பகுதி வெட்டப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தலையில் தட்டையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டமையினால், மண்டையோடு, உடைந்து, மூளையின் கலங்கள் பாதிப்படைந்து மரணம் சம்பவித்துள்ளது.

சடலத்தின் அருகில் செருப்பு, பணம், இரத்தக்கறை படிந்த முருங்க கல் உள்ளிட்டவைகள் தடைய பொருட்களாக மீட்கப்பட்டன.

மேலும், சிறுமியின் உடலில் 21 காயங்கள் காணப்பட்டன. அவற்றில் கடி காயமும் உள்ளடங்குகின்றது. சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில் பின்புறமாக கடி காயம் காணப்பட்டது.

அதில் பல் அடையாளம் தெளிவாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியை ஆய்வு செய்வதற்காக பல் வைத்திய நிபுணருக்கு வெட்டி அனுப்பி வைத்தோம்.

அத்துடன், கீழ் உதடு, மேல் உதடு உள்ளிட்ட பகுதிகளிலும் காயம் காணப்பட்டது. அவை பாலியல் துஷ்பிரயோகத்தின் போது ஏற்பட கூடிய காயங்களாகும் எனவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, ஏனைய காயங்களில் 5 காயங்கள் தலையின் இடது புறம் ஏற்பட்ட கூட்டு காயம் அதில் 4 காயங்கள் வெடிப்பு காயங்கள் ஒரு காயம் கண்டல் காயம் ஆகும்.

அது தட்டையான ஆயுதத்தால் பலமாக தாக்கியதனால் ஏற்பட கூடிய காயம். அவ்வாறு தாக்கப்பட்டதனால் மண்டையோடு உடைந்து மூளையின் மென் சவ்வு கிழிந்து,இரத்தப் பெருக்கு அதிகமாகி மரணம் சம்பவித்து உள்ளது.

ஏனைய 11 காயங்களும் உராய்வு காயங்கள் மற்றும் கண்டல் காயங்கள் ஆகும் என சட்ட வைத்திய அதிகாரி தனது சாட்சியத்தின் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2012ஆம் ஆண்டு நெடுந்தீவு பகுதியில் வைத்து 12 வயதான ஜேசுதாஸ் லக்சாயினி பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like