கோலாகலமாக திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுதினம் (06) கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

50 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட குறித்த ஓடு பாதையினை திறந்து வைக்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 3 மாதங்களாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பகுதியளவில் மூடப்பட்டு ஓடுபாதைகளின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அந்த வகையில் 75 மீற்றர் அகலமாக இந்த ஓடுபாதை மாற்றியமைக்கப்பட்டு, A -380 எயார் பஸ் ரக விமானங்களும், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட UL-1162 விமானமும் தரையிறங்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓடுபாதையின் பகுதிகளுக்கு LED வகை மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் மிகக் குறைந்தளவு மின்சாரமே செலவாகும் என்றும், இதன் காரணமாக 80 % மின்சார கட்டணத்தினை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் LED வகை மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், அசாதாரணமான காலநிலையிலும் கூட விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்கக் கூடியவாறு அமையப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like