பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமான நிவாரணம் வழங்குமாறு வவுனியாவிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமான நிவாரணம் வழங்குமாறு வவுனியாவிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

கோவிட்19 ஐ கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் அரச, தனியார் துறையினரைவிட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்திற்கான தொழிலை நாளாந்த அடிப்படையில் மேற்கொண்டுவருபவர்களே எனவே அவர்களுக்கு உடனடியாக நிவாரனம் வழங்குமாறு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ. ரி. லிங்கநாதன் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளார்.

அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அவசரமான நிவாரண வழங்கலுக்கான விண்ணப்பம்

கோவிட்19 வைரசைக் கட்டுப்படுத்த தங்கள் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை வரவேற்பதோடு மக்களின் பிரதிநிதிகளாயிருந்த நாமும் தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அர்த்தமுள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளோம் என்பதையும் தங்களுக்கு அறியத்தருகிறேன்.

கோவிட்19 ஐ கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் அரச, தனியார் துறையினரைவிட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்திற்கான தொழிலை நாளாந்த அடிப்படையில் மேற்கொண்டுவருபவர்களே என்பதை தாங்கள் அறிவீர்கள்.

வியாபார நிலையங்களை சார்ந்து தொழிலில் ஈடுபடும் நாட்கூலித் தொழிலாளர்கள், சுத்திகரிப்பு தொழிலாளர்கள், வீதியோர வியாபாரிகள் ஆகியோர் தமது அடுத்தநாள் செலவுகளுக்கு தவிக்கும் நிலையை கோவிட்19 ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசிய விலைகளிற்கு உச்சவரம்பிட்டு சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்கியதைப் போல மேலே குறிப்பிட்ட பிரிவினருக்கும் நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கிராம அலுவலகம், சமுர்த்தி அலுவலகம், உள்ளூராட்சி மன்றங்கள், வர்த்தகர் சங்கம் ஆகிய பிரிவுகளின் உதவியுடன் சமூகத்தில் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் உள்ளவர்களின் விபரங்களைப் பெற்று அவர்களுக்கு இயலுமானளவு விரைவாக நிவாரணம் கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்

மேலும் அவசரமானதும் அத்தியாவசியமானதுமான நடவடிக்கையாக வர்த்தக நிலையங்கள், சந்தைகள், பொதுப் போக்குவரத்து சாதனங்கள், உணவகங்கள் அனைத்திலும் பணியாற்றும் அத்தனை பேரும் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்ற நடவடிக்கை எடுப்பதோடு அவர்களுக்கு தேவையான முகக் கவசங்களை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கூடாக வழங்க காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

You might also like