வவுனியாவில் ஊரடங்கு தளர்வு நேரத்தில் கட்டுப்பாடுகள் : அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

வவுனியாவில் ஊரடங்கு தளர்வு நேரத்தில் கட்டுப்பாடுகள் : அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

வவுனியா ஊரடங்கு சட்ட தளர்வு நேரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை என வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன அவர்கள் தெரிவித்தார். அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாளை (23.03) காலை 6.00 மணிக்கு வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்போது பலசரக்கு விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், மருந்தகம், எரிபொருள் நிரப்பு நிலையம் என்பன மாத்திரமே திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருவதால் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் முகமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். தனியார் வங்கிகள் மூடப்படும். அரச வங்கிகளி் சேவைகள் மட்டுப்படுத்தப்படுவதுடன் மக்கள் அத்தியாவசிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக கூடுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்.

அத்துடன் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் வவுனியாவில் கையிருப்பில் உள்ளன. பற்றாக்குறையான பொருட்களை கொழும்பிலுள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து வவுனியா மொத்த வியாபாரிகள் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடையாது தமக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் கிராமப் புறங்களிலுள்ள பலசரக்கு கடைகளுக்கும்.தேவையான அளவு அத்தியாவசிப் பொருட்களை மொத்த வியாபாரிகள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் நகருக்கு வந்து பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை கிராமங்களிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கும் பட்சத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிப் பொருட்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை.

பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினர் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like