“இவ்விடத்திலேயே மருந்து குடித்து சாவேன்” இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய தாய் விஷ போத்தலுடன் போராட்டம்

தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று மதியம் இப் போராட்டம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்தது.

அதன்பின் அவர்களது காணியில் உள்ள வீட்டில் ஒரு குடும்பம் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்கியிருந்தது. அவர்களால் குறித்த காணியில் பிறிதொரு வீடும் கட்டப்பட்டுள்ளது.  தற்போது அந்த குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வரும் நிலையில் தமது உறவினர் எனக் கூறி ஒரு குடும்பத்தை குறித்த காணியில் குடியேற்றியுள்ளனர். இந்நிலையில் இடம்பெயர்ந்து இந்தியா சென்ற காணி உரிமையாளரும் அவரது மகனும் கடந்த 23 ஆம் திகதி வவுனியாவிற்கு வந்த நிலையில் தமது காணிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த காணியில் வசிப்பவர்கள் அது தமது காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அவர்களது காணியையும், அவர்களது வீட்டையும் கொடுக்க மறுத்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து வந்தவரிடம் அவரது காணி தான் என்பதற்கான ஆதாரங்கள் 1976 ஆம் ஆண்டு முதல் உள்ளது. இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்குச் சென்றும் தமக்கான நீதி கிடைக்கவில்லையென தெரிவித்து தமது காணி வேண்டும் அல்லது இவ்விடத்திலேயே மருத்து குடித்து சாவேன் எனத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது குறித்த தாயையும், அவரது உறவினர்களையும் அழைத்து பேசிய மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோர் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களை அழைத்து குறித்த காணி ஏன் உரியவர்களிடம் ஒப்படைக்கபடவில்லை என்பது பற்றி கலந்துரையாடினர். இதனையடுத்து மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஒருவரை குறித்த காணிக்கு அனுப்பி அதன் உண்மை நிலை தொடர்பாக அறியத்தரும்படி மாவட்ட அரச அதிபர் தெரிவித்திருந்தார்.  ஒரு வார காலத்திற்குள் சரியான முடிவு வழங்கப்படும் என மாவட்ட செயலக அதிகாரியால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை, நேற்று இரவும் குறித்த தாய் தனது காணியின் முன்பாக மருத்துபட போத்தலுடன் போராடியிருந்தார். அக்காணிக்கு அயலில் உள்ள மக்களும் அவ்விடத்திற்கு வந்து தாம் இங்கு இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களே இருந்ததாகவும், அது அவர்களது காணி எனவும் தெரிவித்து ஆதரவு வழங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மருந்துப் போத்தலை மீட்டதுடன் போராட்டத்தை சமரசமாக தீர்த்து வைத்திருந்தனர்.

You might also like