மட்டக்களப்பில் “அம்மா பசிக்குது..” என்று கூறவும் பொருட்படுத்தாமல் தற்கொலை செய்த தாய்:நேரடி காணொளி

பேஸ்புக் விவகாரத்தால் தற்கொலைகள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றது. .

பேஸ்புக்கில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதால் மனமுடைந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது .

இப்படியான சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அவதானமாக சமூக வலைத்தளங்களை கையாளுங்கள்

தற்கொலையைத் தூண்டும் சமூகக்காரணிகள் ஒரு சிறப்பு நோக்கு

காலத்தின் சக்கரத்தோடு நித்தம் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நிலவும் புரிந்துணர்வின்மையாலும் சிறப்பானதொரு சமூக இடைவினை இன்மையாலும் பொதுவாக உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொடும்செயல்களில் தற்கொலையும் ஒன்றாக காணப்படுகின்றது.

தென், தென்கிழக்காசிய நாடுகளிலும், இலங்கையிலும் இது ஒரு பாரிய சமூகப்பிரச்சினையாகவுள்ளது. இத்தற்கொலையின் தாக்கம் அதிகமாக ஆண்களுக்கு ஏற்படுகின்றதா? அல்லது பெண்களுக்கு ஏற்படுகின்றதா? என்பதனை நோக்குமிடத்து, ஆண்களைவிட பெண்களில் இரண்டு முதல் மூன்று மடங்கானோர் தற்கொலை முயற்சி செய்யும் சாத்தியம் இருந்தாலும், வெற்றிபெறும் சாத்தியமோ ஆண்களில் நான்கு மடங்கு அதிகம் என ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.

ஆண்களைவிட பெண்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர். இதுவே அதிகளவான பெண்கள் தற்கொலை முயற்சி செய்வதற்கான ஒரு முக்கிய காரணமாகும். இருந்தாலும். அவர்களுடைய மனச்சோர்வுவியாதி சிலசமயம் அதிக தீவிரமின்றி இருப்பதனால் அவர்கள் தற்கொலைக்கு அதிக தீவிரமல்லாத முறைகளை தெரிவுசெய்வதற்கான சாத்தியமுள்ளது. மறுபுறத்தில், ஆண்கள் தற்கொலை முயற்சியில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த அவர்கள் தற்கொலை செய்வதற்கு அதிகதீவிரமான, திட்டமான முறைகளையும் திடமான முடிவுகளையும் எடுக்கவும், பின்பற்றக்கூடியதுமான மனநிலையுடையவர்களாக இருக்கின்றனரா? ஏன்பது ஆய்வுக்குரிய விடயமாகின்றது.

சீனாவில் ஆண்களைவிட பெண்களே தற்கொலை முயற்சிகளில் அதிகம் வெற்றி பெறுகின்றனர். அதாவது உலகிலேயே பெண்களில் சுமார் 56 சதவீத தற்கொலைகள் சீனாவில் முக்கியமாக கிராமப்புற பகுதிகளில் நடைபெறுகின்றன என ஓர் ஆய்வு வெளிப்படுத்துகிறது. இவ்வாறாக ஏற்படும் தற்கொலைகளுக்கு பல காரணிகள் துணையாக இருந்தாலும், வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் பொதுவாக தற்கொலையைத் தூண்டுகின்றன.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் கே. ரெட்ஃபீல்டு ஜேம்சன் என்பவர் கூறும்போது ஒவ்வொரு தனிநபரும் ‘செயற்பாடுகளை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில்தான் மரிப்பதற்கு எடுக்கும் தீர்மானமே அடங்கியிருக்கிறது’ என்கின்றார். மேலும் ‘பெரும்பாலானோருடைய மனம், ஆரோக்கியமாக இருக்கும்போது எந்தவொரு காரியத்தையும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மோசமானதாக எடுத்துக்கொள்வதில்லை’ எனவும் கூறுகின்றார்.

மற்றவர்களுக்கு மிகவும் அற்பமாக தோன்றுகிற விடயங்களுக்கு கூட நம்பிக்கை இழந்து தற்கொலை செய்து கொள்கின்ற இளைஞர் கூட்டம் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றனர். இதனை ஜப்பானில் தற்கொலை தூண்டுதல்களுக்கு ஆளாகிறவர்களுக்கு உதவி செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு இலக்கியவாதி ‘தங்களை துன்பப்படுத்தியவர்களுக்கு தங்களுடைய சாவின் மூலம் தண்டனை கொடுப்பதற்கான உள் தூண்டுதலில் பிள்ளைகள் ஆனந்தம் அடைகிறார்கள்’ ஏன கூறுகின்றார்.

இன்னும் சிலர் பாடசாலைகளில் ஏற்படும் பிரச்சினைகளினாலோ அல்லது சட்டத்தின் பிடியிலோ சிக்கிக் கொள்ளும்போது, காதலில் தோல்வியடையும்போது, அல்லது பரீட்சையில் குறைவான பெறுபேறு பெறும்போது, பரீட்சையை எண்ணி மனவேதனைப்படும்போது, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனமுடைந்து போகும்போது தங்களுடைய உயிரை போக்கிக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.

இன்னும் சிலரை பொறுத்தவரையில் பணம் அல்லது வேலை சம்பந்தமான பிரச்சினைகளே பொதுவாக தற்கொலையை தூண்டும் காரணிகளாக அமைந்து விடுகின்றது. எடுத்துக்காட்டாக ஜப்பானில் பலவருட பொருளாதார வீழ்ச்சிக்குப்பின் சமீபத்தில் தற்கொலை எண்ணிக்கை ஆண்டுக்கு 30,000 ஐயும் தாண்டிவிட்டது.

மேலும் கடன் தொல்லைகள், வியாபாரத்தில் தோல்விகள், வறுமை, வேலைவாய்ப்பின்மை, குடும்ப பிரச்சினைகள் என்பனவும் தற்கொலைக்கான காரணிகளாக அமைந்து விடுகின்றன. வேலையிலிருந்து ஓய்வுபெறுவதும் வியாதியும் கூட முக்கியமாக வயதானவர்கள் மத்தியில், தற்கொலையை தூண்டுகிற முக்கிய காரணிகளாகும். ஒரு நோயாளி தன்னுடைய வியாதியை சகிக்க முடியாததாக எண்ணும்போது அது தீரா வியாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அதிலிருந்து தப்பிக்க தற்கொலையை ஒரு பரிகாரமாக அவர் நாடுகிறார்.

தற்கொலைக்கான காரணிகள் பல்வேறாக காணப்பட்ட போதும்; அடித்தளத்திலுள்ள சில முக்கிய காரணிகள் ⁠தற்கொலை தூண்டுதலுக்கு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதாவது மனநிலை கோளாறுகள் (Mental Disorders), கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்படும் கோளாறுகள் (Addictive Disorders), மரபுவழி பண்புகள் (Genetic Makeup), மூளை இரசாயனம் (Brain Chemistry) ஆகியன காரணமாகவும் இன்றைய காலத்தினை பொறுத்தவரையில் தற்கொலைகள் மிக அதிகமாக இடம்பெறுகின்றன.

மனச்சோர்வு (Depression), பித்துவெறி கோளாறுகள் (Bipolar Mood Disorders), உளச்சிதைவு (Schizophrenia) போன்ற மனநல கோளாறுகளும் மதுபானத்திற்கு அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் கோளாறுகளும் இந்தக் காரணிகளில் மிகவும் முக்கியமானவை. தற்கொலை செய்துகொண்ட 90 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு இப்படிப்பட்ட கோளாறுகள் இருந்ததாக ஐரோப்பாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டுகிறது.

அநேக தற்கொலைகளுக்கு ஒருவருடைய மரபியல் பண்பே அடித்தளத்திலுள்ள முக்கிய காரணியாக இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். சிலருடைய பரம்பரையில் தற்கொலை சம்பவங்கள் நிறைய நிகழ்ந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் காட்டுவதும் உண்மைதான். என்றாலும், ‘மரபியல் செல்வாக்கு இருப்பதால் தற்கொலை தவிர்க்க முடியாதது என எந்த விதத்திலும் கூறமுடியாது’.

வாழ்வோடு போராட தெரியாத மனிதன் தனது பிரச்சினைகளுக்கு தீர்வாக தற்கொலையை கைக்கொள்கின்றான். இன்றைய சமூக அமைப்பில் மனித வாழ்க்கையானது முரண்பாடுகள், பிரச்சினைகள் ஆகியவற்றோடு பின்னிப்பிணைந்ததாகக் காணப்படுகின்றது. தனி நபருக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்குமிடையிலான முரண்பாடுகள், கருத்து வேற்றுமைகள், என்பன தனிமனிதனின் உடல், உள, சமூக, பொருளாதார கலாசார மற்றும் குடும்ப நலன்களை பெரிதும் பாதிக்கின்றன. அவற்றுக்கு எதிர்நீச்சல் போடமுடியாத பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர் அல்லது தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் இவ்வாறான பிரச்சினைகளினால் ஏற்படும் தாக்கம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும். இதற்காக மக்கள் மத்தியில விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உள்ளத்தை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு வழிமுறையினை கண்டறிந்து தற்கொலையின் தீவிரம் குறித்தும், எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகிவிட முடியாது எனும் விளக்கத்தினையும் அளிக்க வேண்டும். குறிப்பாக உணர்ச்சி சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் சிகிச்சையும் அளித்தல் அவசியமானதாக காணப்படுகின்றது.

மேலும் குறித்த நபர்கள் ஏன்?, எதற்காக? தற்கொலை எனும் தவறான ஒரு முடிவிற்கு வருகின்றனர் எனும் காரணங்களை கண்டறிந்து அவர்களிடம் காணப்படும் வளமான திறன்கள், பலம், ஆற்றல் என்பவற்றை கண்டறிந்து வெளிக்கொணர்வதன் மூலம் அவர்களை அவர்களுக்கே புரியவைத்து, அதன்மூலம் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் முறையை பின்பற்றல் வேண்டும்.

இவ்வாறான விடயங்களின் முக்கியத்துவமும் அதன் வெற்றிகரமான செயற்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்படாத நிலையில் காணப்படுவதால்தான் இலங்கையில் உளப்பிரச்சினைகளினால் ஏற்படும் தற்கொலை போன்ற சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துக் காணப்படுகின்றதென சமூக ஆர்வளர்களும் உளவியலாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே தற்கொலையின் தீவிரத்தன்மையினை குறைத்துக் கொள்வதற்கான காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக குடும்பம், பாடசாலை, சமயத்தாபனங்கள் மட்டத்திலும், மற்றும் கிராம மட்டகுழுக்கள் மட்டத்திலும், சட்ட ஏற்பாடுகள், நீதிநடைமுறைகள், மற்றும் சமூக, கலாசார, அரசியல், பொருளாதார நிலைகளிலும் வெற்றிகரமான செயற்பாடுகளை மேற்கொள்ளப்படுகின்றபோது, தற்போது இலங்கையின் சனத்தொகையில் நான்கு பேருக்கு ஒருத்தர் ஏதாவதொரு உளப்பிரச்சினைக்கு ஆளாகியுள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், மனச்சோர்வு, விரக்த்தி மனப்பாங்கு போன்ற உளப்பிரச்சினைகளால்; ஏற்படுகின்ற தற்கொலை என்ற பாரிய சமூகப் பிரச்சினையினைக் குறைக்க முடியும்.

உளவியல் முறைகளினூடாக நபர்களின் ஆளுமைவிருத்தி, சமநிலையற்ற உளநிலைமைகளைத் தவிர்த்தல், நிறுவன ஒருங்கிணைப்பு, தலைமைத்துவம் வழங்குதல், அறிவூட்டல் மற்றும் உளவளத்துணை தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் உளச்சுகாதாரத்தை மேம்படுத்தி சகல பிரஜைகளையும் இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் பங்குபற்றச் செய்தல் என்ற சமூக சேவைகள் அமைச்சின் பணிகள் வெற்றிகரமாக செயற்படுமேயானால் ஆரோக்கியமுள்ள எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதுடன் முக்கியமான சமூகப்பிரச்சினையாக காணப்படும் தற்கொலைகளைக் குறைத்து மனித வளங்களை இந்நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபடச் செய்ய முடியுமென்பது உயிர்கள் மீது அன்பும், இளைய தலைமுறையினர் மீது கருணையும், நாட்டின் மீது பற்றும், சமூக அக்கறையும் உடையவர்களின் அவாவாகும்.

 

You might also like