சுமந்திரன் கொலை முயற்சி: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 தினங்களுக்கு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் ஐவர் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சந்தேகநபர் ஒருவரது சகோதரி, “அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக எனது சகோதரர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். ஆனால், அவ்வாறானதொரு செயலை செய்வதற்கான உடல் வலிமையேனும் அவர்களிடம் இல்லை.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் எமது தேவைகள் பல பூர்த்திசெய்யப்பட வேண்டியுள்ளன. அவ்வாறிருக்கையில், அவரை கொலை செய்ய எத்தணித்ததாக எம்மை சார்ந்தவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஏற்க முடியாததாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.