வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து துணிகர கொள்ளை

முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிட்ட திடுக்கிடும் சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் வவுனியா பசார் வீதி முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு சென்ற இருவர் தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டி ஒன்றை சிதம்பரபுரம் பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் மயிலங்குளம் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளனர்.

குளிர்பானத்தை குடித்ததும் சாரதி மயக்கமடைந்ததை தொடர்ந்து சாரதியின் கையிலிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றை கொள்ளையிட்டதுடன், சாரதியை அவ்விடத்திலேயே விட்டு பிறிதொரு முச்சக்கர வண்டியில் வவுனியா நகரிற்கு வந்தடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த சாரதியின் நண்பர்கள் சுதாகரித்து சாரதியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தேடுதலை நடாத்தி கொள்ளையர்கள் இருவரையும் கண்டுபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அகப்பட்ட இருவரும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியான தெற்கிலுப்பைக்குளம் பகுதியைசேர்ந்த காண்டீபன்(27) என்பவர் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

You might also like