கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் ஏன் கடைசி மாவட்டம்?: இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் ஏன் கடைசி மாவட்டம்?: இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

♦மு.தமிழ்ச்செல்வன்

கடந்தவாரம் கிளிநொச்சி சிந்தனையாளர் குழாம் கூடி மாவட்டத்தின் கல்வி நிலை தொடர்பில் மிகவும் கவலையோடும், கரிசனையோடும் கலந்துரையாடியிருந்தனர்.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பல மாவட்டங்கள் முன்னிலையில் உள்ள போதும் கிளிநொச்சி தொடர்ச்சியாக ஏன் கடைசி மாவட்டமாக இருக்கிறது? இதனை கண்டறிய விஞ்ஞான ரீதியாக மாவட்டம் மேற்கொண்ட ஆய்வுகள் என்ன? இந்த நிலைமையினை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என கலந்துரையாடினார்கள்

இறுதியில் சிந்தனையாளர் குழாம் ஒரு தீர்மானத்திற்கு வந்தது மாவட்டத்தின் கல்வி நிலை தொடர்பாக சுயாதீனமான குழு ஒன்றை விஞ்ஞான ரீதியான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நிதியினை தாம் பெற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தீர்மானித்தனர். இதனை உரிய தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தவும் அவர்கள் முடிவு செய்திருந்தார்கள்.

எனவே இது தொடர்பில் நாமும் ஆராயும் வகையில் முதலில் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் உயர் பதவிகளிலிருந்து ஓய்வுப்பெற்றவர்கள் மற்றும் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி அக்கறையோடு செயற்பட்டு வருகின்றவர்களின் கருத்தினை பெற்றிருந்தோம். அந்த வகையில்

கிளிநொச்சி மாவட்டம் 2010 க்கு பின்னர் கல்வியில் (இடையில் ஒரு சில வருடங்களை தவிர) தொடர்ந்தும் இலங்கையின் 25 வது மாவட்டமாக இருந்து வருகின்றமை தொடர்பில் இவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன?

கிளிநொச்சி வலயத்தின் ஓய்வுப்பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சருமான த குருகுலராஜா

யு த்தத் திற்கு பின்னரான கடந்த பத்து வருடத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களும், பிறழ்வுகளும் உருவாகியுள்ளன. இந்த சூ ழ்நி லையில் பெற்றோர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகளின் கல்வி மீதான வி ழிப்புணர்வு அல்லது அக்கறையின்மை காணப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வியில் காட்டும் அக்கறை பெரும்பான்மையாக உள்ள ஏனைய பெற்றோரை்களிடம் இல்லை.

மேலும் தற்போது பெரும்பாலான அதிபர், ஆசிரியர்கள் ஒரு டாஸ்க் உருவாக்கி கொண்டு பணியாற்றுவதி்லலை. அரப்பணிப்புடன் அவர்களி தங்களின் கடமையைச் செய்கின்றார்களா? வகுப்பறைகளில் ஆசிரியர்கள் தங்களது 40 நிமிடத்தை பிரயோசனப்படுத்துகின்றார்களா? போன்ற கேள்விகளுக்கு மத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான ஆசிரியர்கள் வெளி மாட்டங்களிலிருந்து வந்து போகின்றவர்கள் இவர்களின் பெரும்பாலான நேரம் போக்குவரத்தில் செலவழிகிறது. இவர்கள் ஒன்றரைக்கு பின் பாடசாலைகளில் மேலதிக நடவடிக்கைகளில் ஈடுப்படுவதில்லை ஆசிரியர்களிடம் காணப்படுகின்ற ஆளுமையின்மை ஆதாவது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மேலதிக தகைமைகளை வளர்த்துக்கொள்வதில்லை

அத்தோடு 2009 க்கு பின்னர் வழங்கப்பட்ட தொண்டராசியர்கள் செயற்பாடுகளும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் ஆளுமை விருத்திசெய்யப்படல் வேண்டும்.

மேலும் மாவட்டத்தின் அனைத்து தரப்பினர்களும் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும் ஆசிரியர்கள், அதிபர்கள் தொடக்கம் கல்வித்துறை அதிகாரிகள் வரை பொறுப்புக் கூற வேண்டும். அத்தோடு நாம் மாவட்டத்தின் இந்த நிலைமைக்கு தனியே கல்வித் துறையை மாத்திரம் குறை கூறிவிட்டு கடந்துச் செல்ல முடியாது எனத் தெரிவித்த அவர்

மாணவர்கள் தற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு விடயங்களில் அதிக நேரத்தை செலவு செய்கின்றார்கள். பாடசாலை, தனியார் கல்வி நிலையங்கள், பிரத்தியோக வகுப்புக்கள் என ஓய்வின்றியும் கற்ற பாடங்களை மீள படிப்பதற்கு நேரமின்றியும் உள்ளனர் இதுவும் மாணவர்களின் கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பாடசாலைகளில் இடம்பெறுகின்ற நவீன கற்றல் செயற்பாடுகள் (ஸ்மார்ட் வகுப்பறை) கல்வி வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் நிலைகளுக்கு ஏற்ப புரிந்துகொண்டு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படுவது போன்று வராது நவீன கற்பித்தல் நடவடிக்கைகள்.

மேலும் பௌதீக வளப்பற்றாக்குறையை கல்வியின் வீழ்ச்சிக்கு காரணம் செல்ல முடியாது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் பௌதீக வளப்பற்றாக்குறை இல்லை.

எனவே நாம் கிளிநொச்சி மாவட்டத்தை மேற்கூறப்பட்ட காரணங்களிலிருந்து நிவர்த்தி செய்து கொண்டு செல்கின்ற போதே கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி முடியும். எமது மாவட்டத்தின் சித்தி வீதத்தை 81,82 மேல் கொண்டு சென்றாலே போதுமானது எனத் தெரிவித்தார்.

க . பத்மநாதன்
ஓய்வுநிலை பிரதி கல்விப் பணிப்பாளர் திட்டமிடலும் மீளாய்வும் கிளிநொச்சி

அண்மையில் க.பொ த (சா. த ) தேர்வு முடிவுகள் வெளியாகியதை தொடர்ந்து தேர்வில் சிறப்பு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் செயற்பாடுகள் சமூக வலைத் தளங்களை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. அரச பள்ளிகளும் தனியார் கல்வநிலையங்களும் அவ்வெற்றிக்கு உரிமை கோரிக் கொண்டிருக்கின்றன. கல்வி வணிகமாக மாறிவிட்டது.

தேர்வு முடிவுகள் தொடர்பாக பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

முதலாவது நிலையில் இருந்த கொழும்பு மாவட்டத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டமும் மாத்தறை மாவட்டமும் முறையே முதலாம் இரண்டாம் இடத்தை பெற்று மூன்றாம் நிலைக்கு தள்ளியுள்ளதுடன் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இது சொல்லு செய்தி என்ன?

மறுபுறம் மாணவர் திறன்களை அளவீடு செய்வதற்கு பின்பற்றப்படுகின்ற தேர்வுமுறை போதுமானதா? இத்தேர்வுமுறையின் பெறுபேறுகளை கொண்டு சராசரியை கணிப்பிடுவதன் மூலம் செயப்படுகின்ற ஒப்பீட்டு ஆய்வை மட்டும் கருத்திற்கொண்டு எமது மாவட்டம் கல்வீல் பின்னடைவை எட்டியுள்ளது என்று கூறுவது ஏற்புடையதா. ஒரு புள்ளிவிபரவியல் அல்லது கணித விற்பன்னர் இப் பெறுபேறுகளைக் கொண்டு வேறு திருந்திய கணித முறைகளைக் கொண்டு எமது மாவட்டத்தில் ஏதும் பின்னடைவில்லை என்று நிரூபிக்கவும் கூடும்.

இருந்தபோதும் வெளிப்படையாக தெரிகின்ற சில காரனிகளை கொண்டு பல்வேறு தரப்பினரால் சொல்லப்படுகின்ற காரனங்களையும் நாம் ஒதுக்கி விடலாமா என்ற கேள்வியும் எழுகின்றது.

மானவர் கல்வி அடைவில் அரசியல் தலைமமைகள் காட்டுகின்ற கரிசனை முக்கியம் என சொல்லலாமா? ஹம்பாந்தோட்டை மாத்தறை மாவட்டங்கள் முன்னிலைக்கு வந்தமைக்கு அரசியல் தலைமைத்துவத்தை காரணமாக கூறலாமா?

இன்னும் எமது மாவட்டத்தில் நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கோட்டக்கல்வி அலுவலராகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமை ஆற்றி அரச பணி ஓய்வின் பின்னும் தொடர்ந்தும் மாவட்டத்திலேயெ வதிபவன் என்ற முறையில் எனது அனுபவத்தினூடாக மாணவர் கல்வி அடைவில் தாக்கம் ஏற்படுத்துகின்ற சில காரணிகளை கூறமுடியும்

1) எதுவித பெளதீக வளங்களும் இன்றி மர நிழல்களில் நிலத்தில் இருந்து கல்வி கற்றகாலம் ஆசிரியர்களும் மாவட்டத்துக்குள் இருந்த் செயற்பட்டதால் கல்வி அடைவு தொடர்பாக எந்த விமர்சனங்களும் எழவில்லை அல்லது அப்போதைய அரசியல் தலைமை காரணமாகலாம்.

2) இப்போ ஏராளமான வளம். பள்ளிகளுக்கு உள்வருகை வாரத்தில் இரண்டு விழா நடைபெறல்.

3) மாணவ்ர் கல்வியில் கரிசனைற்ற அர்சியல் தலைமைகளின் செயற்பாடுகள். பழிவாங்கல் இடமாற்றங்கள். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் எம்முடன் சிறப்பாக கடமையாற்றிய இரு கல்விப் பணிப்பாளர்கள் பின்னாளில் அவர்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டமை

4) தினமும் யாழ் மாவட்டத்திலிருந்து காலையில் வந்து மாலையில் வீடு திரும்புகின்ற ஆசிரியர்களின் உட்ற்சோர்வு வினைத்திறன் மிக்க கற்பித்தலுக்கு இடையூறாக இருத்தல்

5) பாட ரீதியாக சமனற்ற ஆசிரிய வளப்பங்கீடு.

6) முறையான வெளி மேற்பார்வை இன்மை. கல்விவலய அதிகாறிகள் பள்ளி நிகழ்வுகளுக்கு விருந்த்நர்களாக அழைக்கப்படல்.

7) அதிகரித்த த்னியார் கல்வி நிலயங்கள். மாணவர்கள் மாறி மாறி ஓட்டம். சுயாதீனமாக மாணவர்கள் இயங்க சந்தர்ப்பம் கிடைக்காமை

8) பள்லிக்கூடம் கல்விநிலையங்கள் மாறி மாறி சென்றா சிறப்பா கற்றல் இடம்பெறும் என்ற பெற்றாரின் தவறான சிந்த்னை

இப்படியாக பல்வேறு காரணிகளால் மாவட்டத்தின் கல்வி நிலை பின் தங்கி காணப்படுகிறது. எனவே மாவட்டத்தைச் சேர்ந்த நாம் அனைவரும் அர்ப்பணிப்போடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எஸ்.சிவகுமார்
யாழ் பல்லைகழகத்தின் பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி பின் தங்கிய நிலையிலிருப்பதற்கான பல காரணிகள் உண்டு.

குறிப்பாக பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர் இன்மை ஆதாவது தங்களது பிள்ளைகளின் கல்வியில் அவர்கள் போதியளவு அக்கறை காட்டுவதாக இல்லை. பிள்ளை பாடசாலை சென்று வந்தால் போதும் என்ற ம னநி லையில் பல பெற்றோர்கள் காணப்படுகின்றனர்.

அத்தோடு வளப் பங்கீடுகளில் சமநிலையற்ற தன்மை காணப்படுகிறது. பௌதீக மற்றும் ஆளணி வளப்பங்கீடுகளில் ஏ9 வீதிக்கு அருகில் உள்ள நகர்புற பாடசாலைகளில் காணப்படும் வளங்களோடு ஒப்பிடுகையில் கிராமப் பாடசாலைகளில் அவ்வாறான நிலைமைகள் இல்லாதிருப்பதும் கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிடுகிறது.

மேலும் பாடசாலைகளில் அதிகரித்த நிகழ்வுகள் மற்றும் அடிக்கடி இடம்பெறும் விழாக்கள் என்பன மாணவர்களின் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கற்பித்தல் நேரங்களில் வீணடிக்கப்படுகிறது. அத்தோடு பல ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுப்படுவதனால் அவர்கள் பாடசாலைகளில் முழுமையாக கற்பிப்பது கிடையாது. தங்களுடைய தனியார் கல்வி நிலையங்களுக்கு மாணவர்களை வருமாறு அழைப்பதும் இந்த நிலைக்கு காரணமாக அமைக்கிறது.

தற்போதைய நிலையில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் ஒரு முகாமைத்து உதவியாளரின் வேலையை செய்யவேண்டியுள்ளது. இதனாலும் ஆசிரியர்களால் சிறப்பான கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட முடியாமை ஏற்படுகிறது.

ஆசிரியர்கள் தினமும் அதிகளவான தூரம் போக்குவரத்தில் செய்கின்றமை. இதனால் ஏற்படுகின்ற விளைவுகள். புலமை பரிசில் பரீட்சை வரைக்கும் பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறையை செலுத்திவிட்டு பின்னர் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தாது விடுதல்.

இதனை தவிர முக்கியமாக கல்வித்துறையில் இருக்கின்ற அரசியல் தலையீடுகள் ஆதாவது கல்வித்துறையை சுயாதீனமாக செயற்பட விடாது தடையாக அரசியல் தலையீடுகள் இருப்பதும் கல்வியின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.

மருத்துவர் த. சத்தியமூர்த்தி
கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது என்ற நிலைப்பாட்டிற்கு வர முடியாது. புள்ளிவிபர ரீதியாக கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் வளர்ச்சி நோக்கியே சென்றுக்கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் இறுதி மாவட்டமாக இருந்தாலும் ஆண்டு தோறும் ஒரு மொதுவான வளர்ச்சி போக்கில் சென்றுக்கொண்டிருக்கிறது.

இருப்பினும் இந்த வளர்ச்சி வேகம் போதுமானது அல்ல எனவே நாம் அவற்றை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அந்த வகையில் முதலில் பாடசாலைகளின் தலைமைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும்.அவர்கள் ஆசிரியர்களையும், மாணவர்களையும், பெற்றோர்களை ஒன்றிணைத்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு மேற்கொண்ட பல பாடசாலைகள் இன்று சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளன. எந்த பாடசாலைகளில் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல்கள் இருக்கிறதோ அங்கு நல்ல பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு பிள்ளைகளையோ, பெற்றோர்களையோ குறை சொல்ல முடியாது.

அத்தோடு ஆசிரியர்களை வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரையும் விளங்கிக்கொண்டு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடம் ஒரு அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றனர். அவ்வாறன இடங்களில் நல்ல வெளிபாடுகளை காணக் கூடியதாக உள்ளது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15 வரையான பாடசாலைகள் தொடர்ச்சியாக மிக மோசமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.. எனவே அவ்வாறான பாடசாலைகளில் சிறப்பு கவனம் செலுத்தி காரணங்களை இனம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்வித்துறையில் வெளியார்களின் தலையீடு இருக்க கூடாது இடமாற்றம், நியமனம் உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகளில் கல்வித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும். மேலும் கல்வித்துறையில் இருப்பர்களில் பலர் வேறு தொழில்களில் அதிக அக்கறை செலுத்தி மேற்கொண்டு வருகின்றனர். ஒருவர் தனது தொழிலோடு பிரிதொரு தொழிலை மேற்கொள்வது தவறல்ல ஆனால் அதனை முதன்மையாகவும், தனது பணியை பகுதி நேரமாகவும் கருத்தி பணியாற்றக் கூடாது.

எனவே மாவட்டத்தின் கல்வித் துறையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல தனியே கல்வித் திணைக்களம் மட்டுமன்றி மாவட்டத்தின் அனைத்து தரப்பினர்களது கூட்டு உழைப்பும் அவசியமாகும் எனத் தெரிவித்து மருத்துவர் த.சத்தியமூர்த்தி.

கி. கமலராஜன்
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர்

கிளிநொச்சி மாவட்டம் தற்பாது வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கையின் 25 வது மாட்டமாக காணப்படுகிறது. வடக்கில் உள்ள 12 வலயங்களில் 10 வது வலயமாக உள்ளது.

மாவட்டத்தை பொறுத்தவரை கல்வி நிலை பின்தங்கி இருப்பதற்கு காரணங்கள் பலவற்றை குறிப்பிடலாம் முதலாவது இந்த மாவட்டத்தில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்களில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வருகின்றவர்கள். இவர்கள் ஒன்று முப்பது பிறகு பாடசாலைகளில் நிற்பது கிடையாது. சென்றுவிடுவார்கள் இதனால் வகுப்பறை கற்பித்தலில் பிள்ளைகளுக்கு விளங்காது விடின் அவர்களுக்கு மாலைநேரக் கல்வி அவசியம் ஆதாவது பரிகார கல்வி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஆனால் இங்கு அது நடைபெறுவதில்லை.

அரச சுற்று நிருப்பப்படி ஆசிரியர் ஒருவர் தனது பணியிடத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு கிலோ மீற்றருக்குள் வசிக்க வேண்டும் ஆனால் இங்கு அப்படியில்லை.

இதனைத் தவிர இரண்டாவதாக முக்கியமானது கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட தொண்டராசிரியர்களின் நியமனங்கள். இவர்களிடம் வினைத்திறன் போதாமையால் அது ஆரம்பக் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு மாணவனின் க.பொ.த.சாதாரன தரப் பரீட்சையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கணிதம், ஆங்கிலம் பாடங்களில் சித்தி வீதம் அதிகரித்திருப்பினும், தமிழ் சமய பாடங்களில் சித்தி வீதம் இம்முறை போதுமானதாக இன்மையும் ஒரு காரணம். மாவட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பதும் ஆதாவது பெரும்பாலான பெற்றோர்கள் வறிய நிலையில் இருப்பதனால் அதுவும் பிள்ளைகளின் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்களிடம் வழிப்புணர்வு போதாமை, கல்வித்துறையில் இடம்பெறுகின்ற அரசியல் தலையீடுகள். வளப் பங்கீடுகளில் சமநிலையின்மை, போன்றவற்றையும் கூறிக்கொள்ள முடியும்.

இதனைத் தவிர மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட பாடசாலைகள் தொடர்ச்சியாக பின் தங்கிய நிலையில் இருப்பதும் மாவட்டத்தின் இந்த நிலைக்கு ஒரு காரணம் எனவே அந்த பாடசாலைகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்

மாவட்டம் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வளர்ச்சி போக்கில் சென்றாலும் ஏனைய மாவட்டங்களின் வளர்ச்சி வீதம் எங்களை விட அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் 25 வது இடத்தில் இருக்கிறது. எனவே தனியே கல்வித் திணைக்களம் மாத்திரமன்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து ஒரு கூட்டு உழைப்பு மூலம் செயற்படுவதன் ஊடாக முன்னோக்கிய பயணத்தை நோக்கி செல்ல முடியும்.

க.முருகவேல்
ஒய்வுப்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்

கிளிநொச்சி மாவட்டம் கல்வி வளர்ச்சியில் கூடிக்கொண்டு போகிறது. ஆனாலும் வளர்ச்சி வீதத்தின் வேகம் போதுமானதாக இல்லை. கடந்த ஆண்டுகளிலிருந்து புள்ளிவிபரங்கள் ஊடாக அவதானித்தால் இதனை நாம் விளங்கிக்கொள்ள முடியும். 2010 க்கு பின்னர். குpளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியானது ஒரு மெதுவான வேகத்தில் அதிகரித்து செல்கிறது. 35 வீதம்,40 வீதம்,50 வீதம் என அதிகரித்து தற்போது 63 வீதத்தில் காணப்படுகிறது. எனவே கல்வி வளர்ச்சி போக்கில் செல்கிறது.

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தினை விட கல்வி வளர்ச்சியில் முன்னிலையில் இருந்த மாவட்டங்களும் ஒவ்வொரு வருடமும் எமது மாவட்டத்தை விட அதிகரித்த வீதத்தில் வளர்ச்சி போக்கு காணப்படுகிறது. அல்லது உதாரணமாமக ஏற்கனவே 75 வீதத்திற்கு மேல் வளர்ச்சி வீதத்தை கொண்டுள்ள மாவட்டம் ஒன்று தற்போது ஐந்து வீதம் வீழ்ச்சியை பெற்றிருந்தாலும் கிளிநொச்சி மாவட்டத்தை விட முன்னிலையில்தான் இருக்கும் .

எனவே கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி வீதத்தில் சென்றாலும் அது போதுமான வளர்ச்சி வீதமாக இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஒன்று கிளிநொச்சி மாவட்டம் தொடர்ச்சியாக வறுமையிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. எனவே போசாக்கு மட்டமும் மாணவர்களின் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும், இரண்டாவது கிளிநொச்சி மாவட்டம் 101 பாடசாலைகளுடன் தனியொரு வலயமாக இருப்பது.இதனால் வலயத்திற்கு அதிகளவு வேலைப் பளு, முறையாக மேற்பார்வை செய்ய முடியாமை,

இவற்றோடு பாடசாலைகளின் அதிபர்களின் தலைமைத்துவம் சிறப்பாக அமைய வேண்டும், ஆசிரியர்கள் சிலர் அர்ப்பணிப்புடன் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்படவேண்டும், சாதித்த பாடசாலைகளின் அதிபர்கள் குறிப்பாக நகர்புற பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகளில் சாதித்த அதிபர்களின் கருத்து பகிர்வுக்கு எற்பாடு செய்தல், மாட்டத்தில் கல்வித் துறையிலிருந்து ஓய்வுப்பெற்றவர்களுடன் அடிக்கடி கல்வி முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளல்,வெளிமாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் தினமும் சென்றுவருவதனை தவிர்த்து கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.(2009 க்கு முன் இந்த நிலைமை இருந்ததன் காரணமாகவே மாவட்டம் பின் தங்கிய நிலைக்கு செல்லாது காணப்பட்டது.)

மாணவர்களின் நிலையை அறிவதற்கு பரீட்சைகளை நடாத்துதல், அவ்வவ்போது ஆய்வுகளை மேற்கொள்ளல். வுடக்கில் மடு, துனுக்காய், கிளிநொச்சி, வவுனியா வடக்கு, முல்லைத்தீவு ஆகிய வலயங்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டை இலக்கு வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

(தொடரும்)

You might also like