கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேரிற்கு பன்றிக்காச்சலுக்கான சிகிச்சை

கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். கர்ப்பவதிகளை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா வைரஸ்க்காய்ச்சலானது தற்போது இலங்கையில் பல மாவட்டங்களில் அதி தீவிரமாகப் பரவிவருகிறது.

முக்கியமாக தற்போது புதுவருட பண்டிகைக்காலம் ஆகையால் பொதுமக்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றுவரும் போது இந்த H1N1 இன்ப்ளுவன்சா வைரஸ்க்காய்ச்சலும் மாவட்டத்தில் மிக வேகமாகப்பரவவாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ள சுகாதார துறையினர் இது கற்பிணித் தாய்மார் பிரசவத்தின் பின்னரான தாய்மார் இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்  முட்டுவருத்தம் சலரோக வருத்தம்  உடையவர்கள் ஆகியோரை தாக்கும்போது விளைவுகள் கடுமையாக இருக்குமென எச்சரித்துள்ளனர்.

எனவே கர்ப்பவதிகள் இக்காலப்பகுதியில் சனங்கள் கூடும் இடங்கள்  கோவில் திருவிழாக்கள், சந்தைகள் கொண்டாட்டங்கள்,பேரூந்துப்பயணங்கள்,புகையிரதப் பயணங்கள் இந்த நோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றைத் தவிர்ப்பதால் இந்தநோய் தொற்றுவதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதன் தாக்கமானது ஜனவரி மாதம் 25 ஆம் திகதியிலிருந்து கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து நேற்று வரையான 67 நாட்களுக்குள் கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலையில் 592 நோயாளர்கள் இந்த இன்ப்ளுவன்சா (H1N1) நோய்க்கான சிகிச்சையினைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்களில் 227 கர்ப்பவதிகளும், 38 சிறார்களும் அடங்குவர்.

மேற்படி 592 நோயாளர்களுள் 60 கர்ப்பவதிகள் மற்றும் 13 சிறுவர்கள் உட்பட 85 பொதுமக்கள் இன்ப்ளுவன்சா வைரஸ்க் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தது கொழும்பு மருத்துவஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இந்த வைரஸ்க் காய்ச்சலால் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அனைத்தும் காய்ச்சல் ஆரம்பித்த தினத்திலிருந்து தாமதமாக அதாவது நான்காவது அல்லது ஐந்தாவது நாளின் பின்னர் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிலேயே ஏற்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகள் மற்றும் பிரசவத்தின் பின்னரான தாய்மார்கள் அனைவரும் காய்ச்சல் தொடங்கிய அதே நாளில் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சென்றமையால் தகுந்த சிகிச்சையானது உடனடியாக வழங்கப்பட்டு அவர்களது உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.

எனவே இந்த இன்ப்ளுவன்சா (H1N1) நோயின் ஆபத்து கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் குறைவடையாத காரணத்தினால் எந்தவொரு கர்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரசமருத்துவமனையை  செல்லுமாறும் அங்கிருந்து மாவட்ட பொது மருத்துவமனைக்கு பாதுகாப்பாகவும் உடனடியாகவும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் கிளிநொச்சி மாவட்ட  சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு  குடும்பநல உத்தியோகத்தரையோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகரையோ தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like