கிளிநொச்சியில் பாரிய மண்ணகழ்வு நடவடிக்கை முற்றுகை- 100 லோட்டுக்கு அதிக மணல் மீட்பு

கிளிநொச்சியில் பாரிய மண்ணகழ்வு நடவடிக்கை முற்றுகை- 100 லோட்டுக்கு அதிக மணல் மீட்பு

கிளிநொச்சி – கண்டாவளை பெரியகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய மண்ணகழ்வு நடவடிக்கை முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டாவளை – பெரியகுளம்பகுதி கிராமசேவையாளரினால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அப்பகுதிக்கு சென்ற விசேட குழுவினரால் முற்றுகையிடப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 100 லோட்டுக்கும் அதிகமான மணல் கும்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கனகராயன் ஆற்றுபகுதி மற்றும் அதனை அண்டிய வயற்காணியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் பொது மக்களால் தொடர்ச்சியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தே குறித்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதியை நேற்று கண்டாவளை பிரதேச செயலாளர் தலைமையிலான குழவினர் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அப்பகுதியில் முறையற்ற வகையிலு்ம, அனுமதியற்ற மணல் அகழ்வு இடம்பெற்று வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சுற்றாடல் பாதிப்படையும் வகையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து கள விஜயம் மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like