யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : அதிகரித்துள்ள குற்றச்செயல்களுக்கும் இதுவே காரணம்

யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள், மது பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மது வரி தொடர்பில் பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

தெற்காசியாவில் மது பாவனையில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாதவாறு யாழ்ப்பாணத்தில் மது பாவனை திடீரென அதிகரித்துள்ளது.

இவ்வாறு மது பாவனை அதிகரித்தமையே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.

எனவே, வடக்கில் அதிகரித்துள்ள மது பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கில் ஒரு சில இடங்களில் உள்ள மதுபானசாலைகள் பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட இடங்களில் இவ்வாறான மதுபானசாலைகள் காணப்படுகின்றன.

இதேவேளை, வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதே அந்த மக்களுக்கு தேவை.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் போராட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்ற கூடாது.

எனவே, காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களிடத்தில் காணப்பட்ட ஆயுதப் போராட்டத்தை இல்லாமல் செய்தது போல் அவர்களின் பிரச்சினைகளும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை நன்கு தெரிந்துகொண்டவர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன. எனினும், அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தமிழ் மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை தவிடுபொடியாக்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதன் போது குறிக்கிட்டு பேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, “உங்களுக்கு முன்னரே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக நான் குரல் கொடுத்துள்ளேன். ஊடகங்கள் எனது கருத்தை தவறாக வெளியிட்டிருப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “அப்படி ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டிருந்தால் நீங்கள் அதற்கு மறுப்பு வெளியிட்டிருக்கலாம்.

எனினும், நீங்கள் அவ்வாறு மறுப்பு எதுவும் வெளியிடவில்லை என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like