நீ தானே அந்த பிள்ளையை கொலை செய்தாய்? பொலிஸார் சித்திரவதை செய்தார்கள் : நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வாக்குமூலம்

“நீ தானே அந்த பிள்ளையை படுகொலை செய்தாய்” என பொலிஸார் என்னை சித்திரவதை செய்தார்கள் என்று நெடுந்தீவு சிறுமி படுகொலையின் எதிரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு சிறுமி லக்சாயினி படுகொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சாட்சிப்பதிவுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர், எதிரி தனது வாக்குமூலத்தை வழங்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து வாக்குமூலம் வழங்கிய எதிரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்கிய அவர்,

“சம்பவம் இடம்பெற்ற நாள் அன்று காலை 6 மணிக்கு இறைச்சி வாங்குவதற்காக மச்சாளின் கணவரின் இறைச்சி கடைக்கு சென்ற போது, இறைச்சி வருவதற்கு நேரமாகும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து, காலை 8 மணியளவில் இறைச்சி வந்தது. பின்னர் இறைச்சியை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட்டு டவுன் (பஸார்) சென்று விட்டேன். நான் இறைச்சி வாங்கி வரும் போது என் பின்னால் சிறுமி (கொலை செய்யப்பட்ட சிறுமி) வருவதை கண்டேன்.

ஆனாலும், சிறுமி எங்கே சென்றாள் என்பது எனக்கு தெரியாது. மாலை வீடு திரும்பியதும், “பிள்ளையார் கோவிலடி சந்தியில் ஆட்கள் கூட்டமாக இருப்பதாக” என் மனைவி தெரிவித்தார்.

அங்கே சென்று பார்த்த போது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்தார். சுற்றிலுமாக பொலிஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள்.

இதனையடுத்து, இரவு நானும் எனது மச்சாளின் கணவரும் வீட்டில் வைத்து மது அருந்தினோம். பின்னர் மச்சாளின் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். அவர் சென்று சிறிது நேரத்தில் ஊர் மக்கள் அவரை பிடித்து என் வீட்டுக்கு இழுத்து வந்தார்கள்.

வீட்டில் வைத்து “நீ தானே அந்த பிள்ளையை கொலை செய்தாய்” எனக் கூறி ஊர் மக்கள் என்னை அடித்தார்கள். பின்னர் வழி நெடுங்கிலும், அடித்து நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு இழுத்துச் சென்றார்கள்.

எனினும், பொலிஸார் என்னை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்த ஊர் மக்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் எனக் கூறினார்கள்.

பின்னர் என்னை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். பொலிஸார் என்னை அழைத்து சென்று “நீ தானே அந்த பிள்ளையை கொலை செய்தாய்” எனக் கூறி சித்திரவதை செய்தார்கள்.

தான் உடுத்தியிருந்த நீல நிற சாரம் உள்ளிட்ட ஆடைகளை கலைய செய்து வேறு ஆடைகள் கொடுத்தார்கள். பின் இரவு 1 மணியளவில் சடலம் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று பார்வையிடுமாறு கூறினார்கள்.

பின்னர் என்னை வாகனத்தில் ஏற்றி விட்டு, நான் பொலிஸாரிடம் கழற்றி கொடுத்த ஆடைகளை சடலத்தின் மீது போட்டு எடுத்தாதர்கள். இதனை என் இரண்டு கண்களாலும் பார்த்தேன்.

அன்று என்னை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தார்கள். இதனால் அந்த இடம் பதற்றமாக காணப்பட்டது. பின்னர் மாலை 3 மணியளவில் கடற்படையினரின் பாதுகாப்புடன் குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றார்கள்.

அங்கு வைத்தே என்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்கள். என் மனசாட்சிக்கு தெரிந்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை” என தனது வாக்கு மூலத்தை எதிரி வழங்கியிருந்தார்.

இதை தொடர்ந்து குறித்த வழக்கிற்கான தர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ம் ஆண்டு நெடுந்தீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன், தொடர்புடைய குற்றவாளிக்கு இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like