நாயைப் போல அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சரத் பொன்சேகா: சபையில் கலங்கிய பிரதியமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சரத்பொன்சேகாவை நாயைப்போல் அடித்து இழுத்துச் சென்ற போது அப்போது எவரும் கேள்வி எழுப்பவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

சரத் பொன்சேகா நாயைப்போல அடித்து இழுத்துக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது யாராவது கேள்வி கேட்டீர்களா?

இப்போது விமலைப் பற்றி கூறுகின்றீர்கள். ஆனால் கடந்த கால ஆட்சியின் போது சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

இராணுவ தளபதி என்ற மரியாதை கூட கொடுக்காமல் நாயைப் போல அடித்து இழுத்துச் சென்றார்கள். அப்போது எனக்கு கண்ணீர் வந்தது.

நான் கேட்ட போது நான் எப்படியும் சிறையில் இருந்து வெளியே வந்து விடுவேன். பதற்றப்படாதீர்கள் என்று பொன்சேகா கூறினார். ஆனால் பிணை கொடுக்கப்பட வில்லை.

அதனை தட்டிக் கேட்க நாம் போராட்டம் செய்த போது வாகனங்களில் வந்து எம்மையும் அடித்து விரட்டினார்கள். அப்போது எங்கே போனது நீதி? யாராவது கேள்வி கேட்டீர்களா?

குறைந்த பட்சம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கூட என்னிடம் பொலிஸார் யார் தாக்கியது என்றும் கேட்கவில்லை.

ராஜபக்சர்களின் அராஜகம் நிறைந்த கடந்த காலத்தில் விசாரணையற்ற ஒரு நீதியே தொடர்ந்து கொண்டு வந்தது.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தார்கள். ஆனால் இப்போது தான் அது விசாரிக்கப்படுகின்றது. கடந்த அரசில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

இராணுவ வீரர்களுக்கு அவமரியாதை செய்வதாக கூறப்படுகின்றது. ஆனால் இராணுவ வீரர்களை தண்டிக்கவில்லை. அவர்கள் பின்னால் இருந்து செயற்பட்டவர்களை கண்டு பிடிக்கவே அரசு விசாரணை செய்கின்றது.

கைது செய்யப்பட்டு பிணை கிடைக்கப்பெற்ற அரசியல் வாதிகள் அதிகம். ஆனால் கடந்த ஆட்சியில் இது போன்று நடந்ததா?

ஆனால் தற்போதைய ஆட்சியிலேயே முறையான நீதி செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டு வருகின்றன. ஆனால் பொய்களைப் பரப்பி மக்களை திசைதிருப்பி வருகின்றார்கள் எனவும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

You might also like