அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பன்னங்கண்டி மக்கள் விசனம்

பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சனை தொர்பாக நடவடிக்கை எடுப்பதாக அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை வழங்கி நிறைவேற்றவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தீர்க்கமான முடிவு எட்டப்படாவிட்டால் போராட்டக்கழத்தில் இருந்து வெளியேற்றப்போவதில்லை எனவும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிரந்தர காணி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 18 ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் மூன்று பிரிவினராக வசித்துவரும் மக்கள், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மலையகம் உட்பட பல்வேறு பகுதிகளிலுமிருந்து இடம்பெயர்ந்து இப்பகுதியில் குடியேறியுள்ளனர்.
இவ்வாறு குடியேறியவர்கள் தனியார் காணிகளில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் குறித்த காணிகளில் குடியேற்றப்பட்டனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு பகுதிகளில் வாழ்ந்த தாம் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தங்கியிருந்தனர்.
2010 ஆம் ஆண்டு கிளிநொச்சி மக்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டபோது, பன்னங்கண்டியில் 3 பிரிவாக வசித்து வந்த மக்கள் தற்போது குடியிருக்கும் காணிகளில் மீண்டும் குடியேறினர்.
இந்த நிலையிலே, நிரந்தர காணி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.