ஊடகவியலாளரை தாக்கிய இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய பிணை இரத்து

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்து கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன் போதே கல்கிஸ்சை நீதிமன்றம் பிணை உத்தரவை இரத்துச் செய்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கி, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளர்களான சந்தேக நபர்கள் கடந்த 30 ஆம் திகதி அடையாள அணி வகுப்பில் நிறுத்தப்படவிருந்தனர்.

எனினும் சந்தேக நபர்களை அடையாளம் காட்ட கீத் நொயார் கல்கிஸ்சை நீதிமன்றத்தில் அன்றைய தினம் ஆஜராகவில்லை.

இதன் காரணமாக கல்கிஸ்சை மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம, அடையாளம் காணும் அணி வகுப்பை இரத்துச் செய்து சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சந்தேக நபர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் தொடர்பான சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், பிணையில் விடுதலை செய்யும் உத்தரவை இரத்துச் செய்ய கோரி, சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேற்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை ஆராய்ந்த நீதிபதி கியான் குலதுங்க, கல்கிஸ்சை நீதிமன்றம் வழங்கிய பிணையை இரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like