பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை

இலங்கை – இந்திய கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாக்கு நீரிணைப்பகுதியில் ஏற்பட்டுள்ள மீனவப்பிரச்சினையை ஆராயும் பொருட்டு நேற்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட இருநாட்டு அதிகாரிகளின் கலந்துரையாடலின்போது இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 6ஆம் திகதியன்று இலங்கையின் கடற்படையினரின் துப்பாக்கி சூட்டினால் மரணமான தமிழக மீனவர் பிரிட்டோ தொடர்பிலும் நேற்றைய சந்திப்பின்போது ஆராயப்பட்டது.

எனினும் இந்த சம்பவத்துக்கு இலங்கை கடற்படையினர் பொறுப்பல்ல என்று இலங்கை தரப்பு தெரிவித்தது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தருமாறு இந்திய தரப்பு இலங்கையிடம் கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 150 படகுகளை விடுவிக்குமாறு இந்திய விடுத்தக்கோரிக்கைக்கு பதிலளித்த இலங்கை தரப்பு அரசியல் ரீதியான இருதரப்பு சந்திப்புக்கு பின்னர் இது தொடர்பில் ஆராயலாம் என்று குறிப்பிட்டது.

You might also like